தமிழ்நாட்டில் நிலவும் ஜாதிய வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தியும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்த மத்திய பா.ஜ.க., அரசின் முடிவுகளை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு ஆதிதிராவிட மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கு 962 கோடி தமிழகத்திற்கு வழங்க வேண்டும்,துரை மாவட்டம் மேலூர் , உசிலம்பட்டி,  சேடப்பட்டி ஒன்றியங்களில் உள்ள இரட்டை குவளை முறை, முடி வெட்டுதல் மறுப்பு , குலதெய்வ கோயில்களில் வழிபாட்டு உரிமைகள் மதிப்பு போன்ற சாதிய வன்முறை வன்கொடுமைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாஜக அரசை கண்டித்தும் மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாடையை வைத்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



 

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர் தொடர்ச்சியாக பாடை முன்பாக கூடியிருந்த பெண்கள் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் கலந்துகொண்டனர். மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகளை கண்டித்தும் தொடர்ச்சியாக முழக்கங்களை எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து பாடையுடன் வந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்காக வந்த போது பாடையுடன் வருவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்னும் சாதிய பாகுபாடுகள் நடைபெற்று வருகிறது இதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.