தமிழக-கேரள மாநிலங்களின் எல்லையாக விளங்கும் தேனி மாவட்டம் குமுளியில் எல்லையாக குமுளி உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், புதுவை, சென்னை, பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினமும் 100-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தமிழக எல்லையான குமுளியில், 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒரு பணிமனை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது குமுளி மலைப்பகுதியில் பேருந்து நிலையம் இல்லாத நிலையில் உள்ளது. பேருந்து நிலையம் அமைக்கப்படாததால், குமுளிக்கு வரும் பேருந்துகள் மலைச் சாலையின் இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இதர வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குமுளி மலைப் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் உள்ளது. ஆனால் அது கேரள மாநிலத்திற்கு சொந்தமான பேருந்து நிலையமாகும். கேரள மாநில பேருந்து நிலையத்தில் கடைகள், கழிப்பறை வசதி, பேருந்து நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில், தமிழக குமுளி பகுதியில் ஒரு பேருந்து நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் கடந்த 11 ஆண்டு காலமாக வைக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற பிரச்னைகளைப் போக்க, பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில், குமுளியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை பேருந்து நிலையமாக மாற்றவும், அங்குள்ள பணிமனையை லோயா்கேம்பில் அமைக்கவும் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. புதிய பணிமனை அமைக்க லோயா்கேம்பில் மின்சார வாரியத்துக்கு சொந்தமான 3.87 ஏக்கா் அளவிலான நிலம் தோ்வு செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ஒரு கோடி ஒதுக்கப்பட்டது. அதற்கான கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னா் கடந்த 2015ஆம் ஆண்டு குமுளியில் உள்ள பணிமனை, லோயா்கேம்புக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து தமிழக எல்லையிலுள்ள குமுளி பணிமனையை, பேருந்து நிலையமாக மாற்றி, பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்ய கூடலூா் நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. ஆனால் பணிமனை இடத்திற்கும், அங்குள்ள கட்டடத்திற்குமான தொகையை கணக்கிட்டு கேட்டு, இடத்தை ஒப்படைக்க மறுத்தது போக்குவரத்துத்துறை. இதனால் கூடலூா் நகராட்சி நிா்வாகம் பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டது.
இதற்கிடையில் குமுளி பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம், கூடலூா் வனச்சரக பகுதிக்குள் வருவதாலும், புலிகள் காப்பக நிா்வாகத்தில் இருப்பதாலும், கட்டுமானப் பணிகளுக்குத் தடை இருப்பதாக வனத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், "அரசு போக்குவரத்து கழகத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையிலேயே வனத்துறை நிலத்தை வழங்கியது. ஆனால் அவா்கள் பணம் செலுத்த வில்லை. இதனால் மீண்டும் வனத்துறையினரிடம் அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது " என்றாா்.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில் , " கழிப்பறை, குடிநீர், நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர். மழைக் காலங்களில் பயணிகள் நனைந்து கொண்டே பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் அவல நிலையில் உள்ளது, குமுளி பேருந்து நிலையம். மேலும் விவசாயிகள், தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள், ஐய்யப்ப பக்தா்கள் ஆகியோா் வந்து செல்லும் பகுதி என்பதால், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பிரச்னைகளுக்கு தீா்வு கண்டு பேருந்து நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.