சின்னமனூர் அருகே மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, மேல்மணலாறு, வெண்ணியாறு, மகாராசாமெட்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால் இங்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மேகமலை வனப்பகுதி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதால் தினமும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
யானைகள் நடமாட்டம்:
மேலும் யானை, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகளும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேல்மணலாறு அருகே ஒற்றை காட்டு யானை ஒன்று தஞ்சம் அடைந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லும்போது வழிமறித்து யானை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளனர்.
மேலும் குடியிருப்பு மற்றும் கடை பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்துவிடும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கிடையே அசம்பாவிதம் ஏதும் செய்யாமல் பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களில் யானை உலா வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். எனவே ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Cauvery issue :காவிரி நீர் விவகாரம்.. ”கர்நாடகாவின் ஆதாரமற்ற அறிக்கை” காங்கிரஸை நெருக்கும் ஸ்டாலின்
காட்டு விலங்குகள்:
அதே போல் வன அடிவார பகுதியான கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளான சுரங்கனார் பீட், பெருமாள் கோவில் புலம், கன்னிமார் கோவில் புலம், கல் உடைச்சான் பாறை ஆகிய பகுதிகளில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இங்கு தட்டைப்பயறு, மொச்சை, அவரை ஆகிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் விவசாயிகள் இரவு நேர காவலுக்கு சென்று பாதுகாப்பு செய்தும் தகரங்கள் தட்டி ஒலி எழுப்பியும் வனவிலங்குகளை விரட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெருமாள் கோவில் புலம் கழுதைமேடு பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அங்கு பயிரிடப்பட்டுள்ள தட்டை, மொச்சை செடிகளை சேதப்படுத்தி வருகிறது. எனவே விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறையினர் அகழிகள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.