தமிழ் சினிமாவின் தரம் நாளுக்கு நாள் உலக சினிமா அளவிற்கு உயர்ந்து கொண்டு போனாலும், தமிழ் சினிமா ரசிகர்கள் தரம் என்பது அந்த அளவிற்கு இல்லை என யோசிக்க வைக்கும் அளவிற்கு, அவ்வப்போது சில சம்பவங்கள் பொட்டில் அறைந்ததைப் போல் நடந்துவிடுகின்றது. 


மிஷ்கினை வம்பிழுத்த விஜய் ரசிகர்கள்:


சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்குபெற்ற இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் செய்தியாளர்களைச் சந்திக்கையில், நடிகர் விஜயை, ’தம்பி எனவும் விஜய் தம்பி லியோ படத்தை பாத்து இருக்கான், படம் நல்லா வந்து இருக்காம்’ என பதில் அளித்திருந்தார். இதில் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் நடிகர் விஜயை ஒருமையில் பேசிவிட்டார் என நடிகர் விஜயின் ரசிகர்கள் வட்டாரத்தில் இருக்கும் சிலர், நடிகர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில் தளபதி வெறியர்கள் என குறிப்பிட்டுள்ளனர். ஒரு நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை ஷேர் செய்து பின்னர் நீக்கிவிட்டார்.


இது போன்ற செயல் இதற்கு முன்னர் நடிகர் அஜித் குமாரை குறிப்பிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஷால் பேசும்போது, அஜித் என குறிப்பிட்டுவிட்டார் எனக் கூறி அவருக்கு மிரட்டல் எல்லாம் விடுத்தனர். அதுபோலத்தான் நடிகர் விஜய் ரசிகர்களின் செயலும் உள்ளது. 


இரண்டு நபர்களுக்குள் இருக்கும் பழக்க வழக்கம் என்பது எந்த அளவிற்கானது என்பதைத் தெரிந்து கொள்ளாமல், ரசிகர்கள் தங்களின் அன்பைக் காட்டுகிறேன் என்ற எண்ணத்தில் தேவையற்ற செயல்களைச் செய்வது தங்களின் அபிமான நடிகரின் நற்பெயருக்கு கலங்கம்தான் ஏற்படுத்தும். அதேபோல் இதுபோன்ற விசயங்கள் குறித்தும் நடிகர்கள் தங்களின் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கும்போது கண்டிக்க வேண்டும். 


எல்லை மீறும் ரசிகர்கள்:


பொதுவாகவே சினிமா ரசிகர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் அதில் முதல் ரகம் சினிமாவை சினிமாவாக பார்த்து, அதன் நிறை குறைகள் தொடங்கி அரசியல் பிரதிபலிப்பு வரை சரியாக சுட்டிக்காட்டி சினிமாவை நல்ல திசைக்கு வழிநடத்துவதில் பங்கு வகிப்பவர்களாக இருக்கிறவர்கள்.


அடுத்த ரகம் என்பது படம் எப்படி இருந்தாலும், படத்தில் நடித்த உச்சநட்சத்திரத்தின் ரசிகர் என்ற ஒரே காரணத்துக்காக, படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ், சொதப்பலான திரைக்கதை என படம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அந்த படத்துக்கு முட்டு கொடுப்பது. மூன்றாவது ரக ரசிகர்கள்தான் மிகவும் முக்கியமானவர்களாக உள்ளனர். அவர்கள் படம் நல்லா இருந்தாலும் இல்லை என்றாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ’முந்தைய திரைப்படம் நன்றாக இருந்தது, இந்த படம் கொஞ்சம் போர்’ என கூறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவார்கள். 


இதில் மிகவும் ஆபத்தான ரசிகர்கள் என்றால், அது அந்த இரண்டாவது ரகம்தான். மோசமான படத்துக்கு முட்டு கொடுப்பதுடன், அவர்களுக்கு மிகவும் ப்ரியப்பட்ட நடிகர் குறித்து யாரேனும் ஏதேனும் கூறியிருந்தால், அது எப்படி நீ எங்க தலைவன இப்ப சொல்லுவ? என மோசமான மனநிலையினை கெட்டியாக பிடித்துக்கொண்டு அதற்கு எதிர்வினையாற்றி வருவருவார்கள். இவர்களால்தான் அந்த நடிகர்களின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகிறது.குறிப்பாக  இப்படியான ரசிகர்கள் முன்னணி ரசிகர்களுக்கு அதிகமாக இருப்பதுதான் வேதனைக்குரியதாக உள்ளது.




Leo First Review: முதல் பாதி பாத்துட்டேன் சூப்பர்... ‘லியோ’ முதல் விமர்சனம் தந்த தயாரிப்பாளர் லலித் குமார்!