திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ஒட்டன்சத்திரம் தங்கச்சி அம்மாபட்டி கிராமத்தில், சின்னக்கரடு எனும் சிறிய மலை உள்ளது. சுமார் 6.67 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நிலையில், தங்கச்சி அம்மாபட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் எவ்விதமான அனுமதியும் இன்றி சின்ன கரடு பகுதியிலிருந்து மண் எடுப்பதோடு, மரங்களையும் வெட்டி வருகிறார். மேலும் பஞ்சாயத்து தலைவர், சின்னக்கரடு பகுதியை பிளாட்டுகளாக மாற்ற, தீர்மானம் நிறைவேற்றி இருப்பது தெரியவந்தது.

 

அங்கிருந்து எடுக்கப்படும் மண் மற்றும் மரங்களை விற்பனை செய்தும் பஞ்சாயத்து தலைவர் பணம் சம்பாதித்து வருகிறார். ஏற்கனவே இயற்கை வளங்கள் அழிந்துவிட்ட சூழலில், எங்கள் கிராமத்தில் உள்ள சின்னக்கரடு பகுதியை அழிக்கும் விதமான கிராம பஞ்சாயத்து தலைவரின் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் ஆகவே தங்கச்சி அம்மாபட்டி கிராமத்தில் உள்ள சின்னகரடு பகுதியிலிருந்து மண் எடுக்கவும், மரங்களை வெட்டவும் சின்னக்கரடு பகுதியை பிளாட்டாக மாற்றவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு,  "சிறு குன்றுகள் போன்ற காடுகள் அரசின் சொத்துக்கள் தங்கச்சி அம்மாபட்டி பஞ்சாயத்து தலைவர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் தீர்மானத்தை நிறைவேற்றி மண் எடுப்பது மரத்தை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்? என கேள்வி எழுப்பினர். வழக்கு குறித்து  திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை உதவி இயக்குனர், பழனி வருவாய் மண்டல அலுவலர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

 



 

தன்னை போலி என்கவுண்டர் செய்யக்கூடாது என சபா (எ) சபாரத்தினம் தொடர்ந்த வழக்கு - டிஜிபி பதில் தர உத்தரவு 

 

மதுரை கீரைத்துறை சேர்ந்த சபா என்கிற சபாரத்தினம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் 2008ஆம் ஆண்டு தவறான நட்பின் காரணமாக என் மீது போலியாக கீரைத்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மதுரை நகர் காவல்துறையினர் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத போதெல்லாம், என்னை குற்றவாளியாக சித்தரிக்க தொடங்கினர். இதனால் என்மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகமானது.

 

மதுரை எஸ் எஸ் காலனி, சுப்பிரமணியபுரம், பரமக்குடி, கீரைத்துறை காவல் நிலையங்களில் என் மீது 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் காவல்துறையினர் என்னை போலி என்கவுண்டரில் கொலை செய்ய திட்டமிட்டு, அதற்கென சிறப்பு குழுவை அமைத்திருப்பதாக தெரிய வருகிறது. ஆகவே, என்னை போலி என்கவுண்டர் செய்யக்கூடாது எனவும், சரணடைய வாய்ப்பு வழங்கி வழக்கு விசாரணைகளை தொடரவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கு குறித்து தமிழக காவல்துறை தலைவர், மதுரை மாநகர காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.