கோயில் நிலங்களுக்கான குத்தகை வழங்காதவர்கள் அடுத்த பிறவியில் வவ்வால்களாக பிறப்பார்கள்
மதுரை ஆதீனம் கருத்து
பிற்கால சோழ பேரரசு உருவாக காரணமான சிறப்புமிக்க போர் நடந்த ஊர் இது. இப்போரின் வெற்றியின் நினைவாக முதலாம் ஆதித்த சோழன் இங்கிருந்த செங்கற்கோயிலை அழகிய கருங்கல் கோவிலாக கட்டினார். இங்குள்ள பிரளயம் காத்த விநாயகர் சிறப்பானவர். சிவபெருமான் கிருதயுக முடிவில் உண்டான பிரளயத்தில் இருந்து இவ்வாலயத்தை காக்கும் பொருப்பை விநாயகரிடம் ஒப்படைத்தார். ஆணையை ஏற்று ஓங்காரத்தைப் பிரயோகம் செய்து ஏழு கடலின் ஆக்ரோஷத்தை ஒரு கிணற்றுக்குள் அடக்கினார். திருக்குளத்தின் கிழக்கே இந்த ஏழு கடல் கிணறு அமைந்துள்ளது. இத்தலத்தை காத்த விநாயகபெருமானை வருணபகவான் கடல் பொருட்களான சங்கம், நத்தாங்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை ஆகியவற்றால் பிரதிஷ்டை செய்தார். பிரளயம் காத்த விநாயகருக்கு எப்போதும் தேன் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது இவ்வாலயத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று பெருந்திறளான மக்கள் கூடுவர். மதுரையைச் சேர்ந்த அரதனகுப்தன் என்னும் வணிகன் இவ்வாலய வன்னி மரத்தின் கீழ் பாம்பு தீண்டி இறந்தான். இவருடன் வந்த இளம் கன்னி ரத்தினாவளி இவ்வாலய ஈசனிடம் அழுது புலம்பினாள்.
ஈசன் காட்சி அளித்து வணிகனை உயிர்பித்து மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு, ஆகியவற்றை சாட்சியாக வைத்து திருமணம் நடத்தி வைத்தார். மதுரை சென்ற வணிகனின் மூத்த மனைவி இவளை ஏற்காத நிலையில் இறைவன் சாட்சிகளுடன் அவர் முன் தோன்றி உண்மை உரைத்தார். மதுரை சுந்தரேசர் ஆலயத்தில், சாட்சியாக வந்த மடைப்பள்ளி, வன்னிமரம், கிணறு ஆகியன இன்றும் உள்ளது. இந்த வரலாறு திருவிளையாடல் புராணத்திலும், சிலப்பதிகாரத்திலும் வருகிறது. இக்கதையை ஒட்டியே புன்னைவனநாதர், சாட்சிநாதர் என அழைக்கப்படுகிறார். அகத்தியர், புலத்தியர், சனகர், சனந்தனர், விஸ்வாமித்திரர் ஆகியோர் வழிபட்ட லிங்கத்திருமேனிகள் இருக்கின்றன. ஆறுமுகனை குழந்தை வடிவில் தன் இடையில் தாங்கி நிற்கும் ஸ்ரீகுகாம்பிகை சந்நிதி சிறப்பு வாய்ந்தது. இந்த அன்னைக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படும். இது திருமண பரிகாரத் தலமாகும். நால்வர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை சந்நிதிகள் இங்கு விசேஷம்.
இத்தகைய சிறப்பு பெற்ற கோயில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் சுவாமி கோயிலுக்கு, பதவி ஏற்றதும் முதல்முறையாக, மதுரை 293-வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வருகை தந்தார்.அவரை கோயில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்திலுள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்துக்களும் அரசியல்வாதிகள் கைவசம் உள்ளது. இதில் கட்சி பாகுபாடு ஏதும் இல்லை. நாடு முழுவதும் கோயில் சொத்துக்களை வைத்துக்கொண்டு கோயிலுக்கு குத்தகை தராதவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாகத்தான் பிறப்பார்கள். குத்தகை தராததால் கோயில்களை முறையாக பராமரிப்பு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மாணவர்கள் சினிமா மோகத்தில் பரிட்சையில் பாஸ் மார்க் வாங்க வேண்டிய மாணவர்கள் டாஸ்மார்க் கடை பக்கம் சென்றுவிடுகிறார்கள்.
தற்போது உள்ள சூழ்நிலையில் வெளிநாட்டுக் கல்வி என்பது தேவையற்றது. இந்த வெளிநாட்டு கல்வியை நாம் போய் கற்பதால் தான் உக்ரைன் போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெறும் போராட்டத்தால், போரினால், மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். தற்பொழுது ரஷ்யா- உக்ரைன் போரில் இந்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு சரியானதாகும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதையும், தமிழில் அர்ச்சனை செய்வதையும், நான் மனமார வரவேற்கிறேன். திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோயில் புரனமைக்கப்பட்டு, இந்த கோயிலுள்ள திருத்தேர் சீர்செய்யப்பட்டு வருகின்ற மாசி மாதம் தேரோட்டம் நடத்தப்படும் என்றார்.