இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நளினி, முருகன், சாந்தனு, பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள  நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.









 

 

மகிழ்ச்சி அனைவருக்குமானது : 

 

இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து ரவிச்சந்திரன் விடுதலை ஆன பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது..,” உச்சநீதிமன்றம் 6பேரை விடுதலை செய்தது ஆறுதல் தருகிறது. இந்த மகிழ்ச்சி உலக தமிழ் இனத்தின் மகிழ்ச்சி, தமிழ்கூறும் நல் உலகம் அனைவருக்கும் நன்றி, துயரம் எனக்கானது மகிழ்ச்சி அனைவருக்குமானது, எங்களுக்காக உயர்நீத்த செங்கொடியின் தியாகத்தை என் நெஞ்சில் ஏந்துகிறேன்







எங்களது விடுதலைக்கு உதவிய தமிழக முதல்வர் ஸ்டாலின், எங்கள் விடுதலைக்கான திறவுகோலை தந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கும் நன்றி, அவர் மறைந்தாலும் அவரை நினைவுகூறுகிறேன் என்றார்.



 

குடும்பத்துடன் இணைய ஆசை :

 

மேலும் எமது விடுதலைக்கு உழைத்த, போராடிய, சிறைபட்ட அனைவருக்கும் நன்றி, அனைவரையும் நேரில் சந்தித்து எனது நன்றியை தெரிவிக்கவுள்ளேன். சமூகத்திற்கு பயன்படும் வகையில் எனது வருங்கால முடிவு எடுப்பேன், ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள எனது தோழர்களோடு குடும்பத்தினரோடு கலந்துமுடிவெடுப்பேன், நூல்கள் எழுதுவேன். எங்களுக்கு கிடைத்தது தாமதமான நீதி என்பது அனைவருக்குமே தெரியும்  எனவும், அவச்சொல்களுக்கு ஆளாகி இலக்கு ஒன்றே குறியாக வைத்து போராடிய வழக்கறிஞர் திருமுருகன் அவர்களுக்கு நன்றி.

 

எனது தாயார் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த விடுதலை இத்தனை ஆண்டின் வலிக்கான நிவாரணி. என் தாய்க்கும், எனது சகோதரரின் குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருந்தனர், அவர்களின் நம்பிக்கையாலும், தோழர்களின் நம்பிக்கையாலும் விடுதலை ஆகியுள்ளேன். தமிழகத்திற்கு முன் உதாரணமாக அரசியலுக்கு மதுரை என்பது போல எங்களது விடுதலைக்கான தொடக்க இடமும் மதுரை தான்,  விடுதலை செய்தவர்களை சிறப்பு அகதிகள் முகாமில் வைக்ககூடாது, சிறப்பு அகதிகள் முகாம் என்பதே வீட்டுச்சிறை போல தான், விடுதலை செய்யப்பட்டவர்களை சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்கள் குடும்பத்துடன் இணைய வேண்டும் என்பது எனது ஆசை.



 

 

எதிர்பார்க்க முடியாது :

 

சட்டத்திற்கு அப்பாற்பட்டு எங்கள் விடுதலையை தடுத்தது மத்திய அரசு. 2004ஆம் ஆண்டிலயே எங்களது விடுதலை கிடைத்திருக்கும், 15 ஆண்டுகள் எங்கள் விடுதலையை தாமதமாக்கியது மத்திய அரசு. மத்திய அரசிடம்  தமிழர்களுக்கான எந்தவித கருணையையும் எதிர்பார்க்க முடியாது. திருமணம் குறித்து தற்போது எந்த எண்ணமும் இல்லை. எனது 31ஆண்டு சிறை வாழ்க்கை எனக்கு மிஞ்சியது எனது தோழர்கள் தான், கணக்கிலடங்காத அளவிற்கு  இழந்துள்ளேன்.

 

எனது உடல்நிலை ஆரோக்கியமான மனநிலையில் இருந்தாலும் சில நேரங்களில் தளர்வேன், அம்மாவின் உணவும், பாசமும் தற்போது நல்ல உடல்நலத்தை தந்துள்ளது. நான் தொடர்ந்து விவசாய பணி, எழுத்து பணிகளை மேற்கொள்ளவுள்ளேன், சமூக பணிகளையும் மேற்கொள்ளவுள்ளேன். வெளிநாடுகளை போல தண்டனைக்கு பிறகான விடுதலை போன்ற குற்றவாளிகள் என்ற பழிகளை துடைக்கும் சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சட்ட ஆணையத்தின் மூலமாக  விவாதம் செய்ய முயற்சிப்போம். இந்த வழக்கு அரசியல் வழக்கு, இன்னும் இந்த வழக்கு விசாரணை முடிவடையாத நிலைதான் உள்ளது, சிபிஐயிடம் கொடுத்தாலும் எதுவும் ஆகபோவதில்லை.

 

வெளிநாட்டு சக்திகள் :

 

இந்த நிகழ்வுக்கு பின்னால் வெளிநாட்டு உள்நாட்டு சக்திகள் உள்ளதால் அவர்களை கைவைக்க முடியாது என்பதால் எங்களுக்கு ஈசியாக தண்டனை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆயுள்தண்டனை சிறைவாசிகளுக்கான சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும், இதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். எங்களின் விடுதலைக்கு உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கும் நன்றி. நீண்ட நாள் ஆயுள்தண்டனை சிறைவாசிகளான இஸ்லாமிய சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும், அதனை முதலமைச்சர் செய்வார் என நம்புகிறோம், எனது விடுதலைக்ககாக குரல்கொடுத்த எழுத்தாளர்கள், செய்தியாளர்களுக்கும் மிக்க நன்றி என்றார்.