தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை என்ற வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் கடந்த 27ஆம் தேதி சிறுத்தை ஒன்று சிக்கி இருப்பதாக அதை பார்த்த விவசாயி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வேலியில் சிக்கியிருந்த 2 வயது சிறுத்தையை காப்பாற்ற முயன்ற போது அது தானாகவே வேலியில் இருந்து தப்பி ஓடியதாகவும், தப்பி செல்லும்போது தேனி உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை தாக்கி விட்டு தப்பி சென்றதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை தாக்கியதில் மகேந்திரனின் இடது கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார்.



தப்பி சென்ற சிறுத்தை அதற்கு மறுநாளே தப்பிய இடத்தில் உள்ள அதே வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அங்கிருந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையை மீட்டெடுத்து கால்நடை மருத்துவர்களே வரவழைக்கப்பட்டு அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் குழி தோண்டி சிறுத்தையை எரித்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.



மின்வேலியில் சிக்கி தப்பிய சிறுத்தை மறுநாளில் அதே மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இதுகுறித்து தேனி மாவட்ட வன அலுவலர் விரிவாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கையும் விட்டிருந்தனர். சிறுத்தை வேலியில் சிக்கி உயிரிழந்த இடம் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் என்பது தெரியவந்தது. இந்நிலையில் சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்த ராமநாதபுரம் மாவட்ட சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது சிறையில் அடைத்துள்ளனர்.



தோட்டத்தின் உரிமையாளரான தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்யாமல் அதில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை வேளையில் சிக்கி இருந்த பகுதி மற்றும் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்து எரிக்கப்பட்ட இடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டனர்.


இந்நிலையில் இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் கூறுகையில், வனத்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ள அப்பாவிகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து ஒத்துக் கொள்ள வைத்ததாகவும், இது மனித உரிமை மீறல் என்றும் இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.




மேலும் தேனி பாராளுமன்ற உறுப்பினர ரவீந்திரநாத் குமாருக்கு சொந்தமான நிலத்தின் வேலியில் சிக்கி சிறுத்தை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆட்டுக் கிடை உரிமையாளர் அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கைது செய்திருந்த நிலையில், தற்பொழுது  ரவீந்திரநாத் நிலத்தின் மேலாளர்களாக பணியாற்றும் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணைக்கு பின் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்துள்ளனர். நிலத்தின் உரிமையாளர் ரவீந்திரநாத்  மீதும் வன உரிமைச்சட்டப்படி வழக்கு பதிவு செய்யவுள்ளதாகவும் வன அலுவலர் தெரிவித்துள்ளார்.




இந்நிலையில் தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் தனது  வழக்கறிஞர்கள் மூலம் கடந்த ஒன்றாம் தேதி தேனி வன சரக அலுவலர் சம்ர்தாவிடம் விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தேனி வனச்சரக அலுவலகத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக வந்துள்ளார். சுமார் மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒ.பி.ரவீந்திரநாத், சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும்,




இது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்கு இல்லை என நான் நம்புவதாகவும், தோட்டத்தின் உரிமையாளரான நான் சட்டப்படி நேரில் ஆஜராக வேண்டும் என்ற காரணத்தினால் நேரில் ஆஜராகி உள்ளேன் என்றும், விசாரணையின் போது தனக்குள்ள சந்தேகங்கள் பற்றி வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளதாகவும், விசாரணைக்கு எப்போது தேவைப்பட்டாலும் நல்லபடியாக வழக்கை முடிப்பதற்கு தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் எனவும் தெரிவித்தார்.