தேனியைச் சேர்ந்த சாயிதா பேகம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் என் கணவர் முகம்மது ஷெரீப். விடுதலை போராட்டத்தில் பங்கேற்றதற்காக 8.10.1943 முதல் 11.4.1944 வரை  பெல்லாரி அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தேன். என கணவர் தியாகி பென்ஷன் பெறாததால், எனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க முடியாது என நிராகரித்தனர். இதை எதிர்த்த வழக்கில், எனது கோரிக்கை பரிசீலிக்க வேண்டுமென நீதிமன உத்தரவிட்டது.  ஆனாலும், எனது மனுமீண்டும் நிராகரித்துள்ளனர். அந்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், "முன்பு நிராகரித்த அதே காரணத்தை கூறி மீண்டும் நிராகரித்துள்ளனர்.

 

விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வயது வரம்போ, சிறை காலமோ எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை. தியாகிகள் அனுபவித்த துன்பத்திற்கும், தியாகத்திற்கும் கடன் பட்டுள்ளோம். இதுபோன்ற தியாகத்தை புரிந்து கொள்ளாமல் அதிகாரத்தில் மறுப்பது என்பதை எப்போதும் நியாயப்படுத்த முடியாது. எனவே, மனுதாரருக்கு சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப பென்ஷன் வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தேனி கலெக்டர் மனுதாரரின் மனுவை 6 வாரத்திற்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.








கறம்பக்குடி பேரூராட்சி வாக்காளர் பட்டியலை திருத்தி அமைக்கக் கோரிய வழக்கு - வழக்கு குறித்து மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலாளர், பேரூராட்சிகள் இயக்குனர், புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த நாங்கியபட்டு பகுதியைச்சேர்ந்த சக்திவேல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் நாம் தமிழர் கட்சியின் கறம்பக்குடி பேரூராட்சி செயலாளராக உள்ளேன். கடந்த 2018-ம் ஆண்டு அரசின் பரிந்துரையின்பேரில் இந்த பேரூராட்சியில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது இங்கு மொத்தம் 15 வார்டுகளில் 12,993 வாக்காளர்கள் இருந்தனர். ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் 514 வாக்காளர்களும், அதிகபட்சமாக 1,466 வாக்காளர்களும் இருந்தனர். புதிய வாக்காளர் பட்டியல், அரசியல் வசதிக்காக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வார்டுகளில் மட்டும் 1,500 வாக்காளர்கள் இடம்பெற்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க இயலாது. பழைய வாக்காளர் பட்டியலில் இருந்ததைப்போல புதிய பட்டியலையும் பாரபட்சமின்றி மாற்றி அமைக்கும்படி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கறம்பக்குடி பேரூராட்சியில் பாகுபாடின்றி வாக்காளர் பட்டியலை திருத்தி வெளியிட உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு, வழக்கு குறித்து  மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலாளர், பேரூராட்சிகள் இயக்குனர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு

விசாரணையை ஜனவதி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.