திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை ஒருங்கிணைத்து, தோட்டனூத்து கிராமத்தில் ரூ.17 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதையடுத்து தோட்டனூத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர். பின்னர் இலங்கை தமிழர்களுக்கு சேலை, துண்டு, பாத்திரங்கள், கியாஸ் அடுப்பு உள்பட ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தமிழகத்துக்கு வந்த தமிழர்களை பாதுகாக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்தில் அமைக்கப்பட உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கான கட்டுமான பணிகளை 120 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் நிறைவடைந்ததும் இலங்கை தமிழர்கள் அந்த முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். இதேபோல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் தி.மு.க. அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக சட்டசபையில் 110 விதியின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் அனைவருக்கும் இந்திய குடியுரிமை பெற்றுத்தரும் நடவடிக்கையையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்கள், இலங்கை தமிழர்களுக்காக செயல்படுத்திய நலத்திட்டங்கள் போல் கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்கள் யாரும் செயல்படுத்தியதில்லை. இனி செய்யப்போவதும் இல்லை என்றார்.
அதன்பிறகு அமைச்சர் மஸ்தான் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையை உருவாக்கினார். பின்னர் தமிழகத்தில் உள்ள 106 இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 321 பயனாளிகளுக்காக தற்போது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட உள்ளது. இங்கு கட்டப்படும் ஒவ்வொரு வீடும் ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தில் கட்டப்படுகிறது என்றார். முன்னதாக தோட்டனூத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைய உள்ள இடம், திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் உள்ள அரண்மனைகுளம் ஆகியவற்றை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்