மேலூர் அருகே விஜயகாந்த் ரசிகர் மாரடைப்பால் மரணம் - கடந்த சில நாட்களாக துக்கத்தில் இருந்து வந்த விஜயகாந்த் ரசிகர் திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நடிகரும் தேமுதிக தலைவரும் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானர். இது தமிழ்நாடு திரைத்துறையினர் மத்தியில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது மறைவின் போது அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பலர் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்திற்குச் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலூர் அருகே விஜயகாந்த் ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக துக்கத்தில் இருந்து வந்த விஜயகாந்த் ரசிகர் திடீரென உயிரிழந்த சோகம்  ஏற்படுத்தியுள்ளது.

 






 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே எட்டிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி 45. இவர் தீவிர விஜயகாந்த் ரசிகர் ஆவார்.  மேலும் தேமுதிக கட்சியின் கொட்டாம்பட்டி ஒன்றிய பிரதிநிதியாகவும் இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. வடை மாஸ்டராக கூலி தொழில் செய்து வருகிறார்.



 

இந்த நிலையில் அண்மையில் விஜயகாந்த் உயிரிழந்ததையடுத்து சோகமாக இருந்து வந்த ஆண்டி நேற்று காலை வேலைக்கு செல்லும்போது மயங்கி விழுந்து கிடந்துள்ளார். பின் அக்கம் பக்கத்தினரால்  மீட்கப்பட்டு அவர் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.  இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டது. உயிரிழந்த ஆண்டி வைத்திருந்த பையில்  கடந்த சில நாட்களாக விஜயகாந்த்  குறித்த நாளிதழ் செய்திகள் அனைத்தையும் சேகரித்து பத்திரமாக தனது பையில் அவர் வைத்திருந்தது அப்போது தெரிய வந்தது . விஜயகாந்த் இறந்த அதிர்ச்சியிலேயே இருந்து வந்த ஆண்டி உயிரிழந்தது கட்சியினரிடையும் , அவரது குடும்பத்தினரிடையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.