தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும்.




அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் ரேஷன் கடை ஒன்றில் பொங்கலுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வழங்காமல் நெடு நேரமாக பொதுமக்களை காக்க வைக்கப்பட்டிருந்த சூழலில், அரசு அதிகாரிகளையும் ரேஷன் கடை ஊழியர்களையும் மதிமுக எம்.எல்.ஏ., சரமாரியாக கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






 



 


 

பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சிரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் மதுரை மூலைக்கரை கீரைத்துறை பகுதி ரேஷன் கடை ஒன்றில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படாமல் நெடு நேரமாக நிற்கவைக்கப்பட்டு இருந்தனர், இது குறித்து சம்பவம் அறிந்த தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதிமுக கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., புதூர் பூமிநாதன் சம்பவ இடத்திற்கு வந்து அரசு அதிகாரிகளையும் கடை ஊழியர்களையும் சரமாரியாக விளாசினார்.



 

மக்களை நெடுநேரமாக காக்க வைக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் முறையாக பொருட்களை வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளையும் ஊழியர்களையும் கடிந்து கொண்டார். மேலும் மக்களிடம் முறையாக பொருட்கள் வழங்காமல் விட்டால் புகார் கூறவும், அரசு உங்களுக்கு இலவசமாக வழங்கும் பொருட்களை முறையாக வாங்கி செல்லவும் அறிவுறுத்தினார். அரசு சார்பில் பொங்கலுக்கு வழங்கப்படும் பொருட்களை முறையாக வழங்காமல் நெடு நேரமாக மக்களை காக்க வைத்த அரசு அதிகாரிகளையும் ரேஷன் கடை ஊழியர்களையும் எம்.எல்.ஏ., கடிந்து கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.