ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன நன்மைகள் உள்ளது என விஜய் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி நூலை விஜய் படித்து பார்க்க வேண்டும் என்றும் மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் மத்திய நிதி அமைச்சர்
மதுரை அண்ணாநகர் பகுதியில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாடு குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கான பாஜக பூத் கமிட்டி மாநாடு திண்டுக்கல்லில் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. உயர்த்திய வரியை மீண்டும் குறைத்ததாக வரலாறு இல்லை. ஆனால் மக்களின் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் தமிழகத்தில் நிறைய வரிகளை தேர்தல் வருவதால் முதல்வர் ஸ்டாலின் குறைப்பார் என நம்பலாம். முதல்வர் மின்சார வரி சொத்து வரியை குறைப்பார் என எதிர்பார்க்கலாம்.
டிடிவி தினகரன் கூட்டணியில் மீண்டும் இணைவாரா என்ற கேள்விக்கு
எல்லோரும் கூட்டணியில் இருந்தால் நல்லது என்பது தான் என் எண்ணம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளதால் பொறுத்திருந்து பார்ப்போம். தினகரன் கூட்டணியில் இருந்த போது அமித்ஷா யாரை முதலமைச்சர் வேட்பாளர் என சொல்கிறாரோ அவருக்கு பிரச்சாரம் செய்வோம் என பேசினார். இப்போது இப்படி பேசுகிறார். இனிமேல் என்ன பேசுவார் என்று பார்ப்போம்.
2026 தேர்தல் பாஜகவுக்கு இலக்கு அல்ல என்ற ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து குறித்த கேள்விக்கு
ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து. 2026 இல் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். 2029 இல் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகமான எம்பிக்களை பெற வேண்டும்.
எதற்கெடுத்தாலும் அதிமுக டெல்லிக்கு செல்கிறார்கள் என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு,
அமித்ஷா டெல்லியில் இருந்து இங்கே வந்து கூட்டணி உறுதி செய்தார்கள். அதைப்பற்றி இவர்கள் பேசவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது சோனியா காந்தியை சென்று சந்தித்தார்களே அதைப்பற்றி பேசுவார்களா?அதிமுகவில் ஜனநாயகம் உள்ளது. அதனால் எல்லோரும் சென்று சந்திக்கிறார்கள். திமுக வில் ஜனநாயகம் இல்லை. கருணாநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்ப நிதி என திமுகவில் எங்கே ஜனநாயகம் உள்ளது. பாஜகவில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது.
மோடி படத்தோடு அண்ணா படம் வெளியிட்டது குறித்த கேள்விக்கு
வேண்டாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் தமிழ்நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்வோம் அரசு ஊழியர்களை நிரந்தரம் செய்வோம் என்றெல்லாம் சொன்னார்கள். எதையுமே செய்யவில்லை. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டு வந்து எல்லா அதிகாரிகளையும் வேலை வாங்குகிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விட்டு திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். அதிகாரிகள் மன வருத்தத்தில் இருக்கிறார்கள். தலைமைச் செயலாளர் கூட அனைத்து ஊழியர்களையும் பணிக்கு வரச் சொல்லி அறிவிப்பு வெளியிடுகிறார். இதுதான் இன்றைய நிலையாக உள்ளது.
விஜயின் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த விமர்சனம் குறித்த கேள்விக்கு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன நன்மைகள் உள்ளது என விஜய் புரிந்துகொள்ள வேண்டும்,5 வருடத்தில் சட்டமன்றம் நாடாளுமன்றம் உள்ளாட்சி தேர்தல்களால் அரசு பணம் செலவாகின்றது. அதை குறைக்க தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறோம். விஜய்க்கு அரசியல் தெரிந்திருந்தால் இதெல்லாம் தெரிந்திருக்கும். முன்னாள் முதல்வர் கலைஞர் கூட நெஞ்சுக்கு நீதியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று எழுதியுள்ளார். இதையெல்லாம் விஜய்யை படித்து பார்க்கச் சொல்லுங்கள்.” என்றார்.