நகை திருட்டு குறித்து நிகிதா அளித்த புகார் தொடர்பாக ஐந்து நபர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தசூழலில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து காவலர்கள் சிறையில் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 20- ஆம் தேதி இந்த வழக்கில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை சென்னை கிளை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, புகார்தாரரான நிகிதா தனது 9.5 பவுன் தங்க நகை குறித்து அளித்த புகாரின் அடிப்படையில், அஜித் குமார் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை கிளை மதுரை உயர்நீதிமன்றம், நிகிதாவின் புகாரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஐந்து பேரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
இந்த நிலையில், இன்று மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் மூவர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, கோயிலில் வேலை செய்த ஆட்டோ டிரைவர் அருண்குமார், கார் பார்க்கிங் அருகே பழக்கடை வைத்திருந்த ஈஸ்வரன், அஜித் குமாரின் நண்பர் வினோத் குமார், கோயில் ஊழியர் ராஜா, அஜித் குமாரை காவல்துறையினர் விசாரிக்கும் போது வீடியோ எடுத்த சக்திஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
கொலை வழக்கில் உள்ள சிக்கல்கள் எப்போது விலகும்?
பின்னர் சிபிஐ அதிகாரிகள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர். அஜித் குமார் வழக்கில், நிகிதா கொடுத்த நகை புகார் உண்மையா, அந்த நகை எங்கு சென்றது, வேறு யாராவது எடுத்தார்களா என்ற கேள்விகளுக்கான பதில் கிடைத்தால்தான், இந்தக் கொலை வழக்கில் உள்ள சிக்கல்கள் விலகும் என்று காவல்துறை மற்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.