"மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகசம்பந்த தேசிக பராமாசாரிய சாமிகள்" என்று போற்றப்பட்ட மதுரை 292ஆவது ஆதீனம் அருணகிரிநாதர். உடல் நலக்குறைவால் கடந்தாண்டு ஆக்ஸ்ட் 13-ம் தேதி உயிரிழந்தார். இதனால் மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். அதற்கு பின் மதுரை 293 வது ஆதீனமாக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மடத்தில் பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் மதுரை 293-வது ஆதீனம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறார்.



முந்தைய ஆதீனம் மதநல்லிணக்க கருத்துக்களை பேசினார். ஆனால் தற்போதைய ஆதீனம் மாறாக மற்ற மதங்களுக்கு எதிராக பேசுகிறார் என குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில்ஆதீனம் மட சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுற நீங்க தளபதியைப் பத்தி தப்பா பேசலாமா ? என்ற வாசகங்களோடு மதுரை ஆதீனத்தை கண்டித்து மதுரையில் விஜய் ரசிகர் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை பழங்காநத்தம் பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சிபுர ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அப்போது மதுரை ஆதீனம் ”நடிகர்  விஜய் சினிமா ஒன்றில் இந்து மதத்தை இழிவுபடுத்துவது போல் நடித்துள்ளார். அதனால் விஜய் படத்திற்கு யாரும் போக வேண்டாம்” என ஒருமையில் பேசினார். இந்த பேச்சு தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் பேச்சை கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை மாநகர் முழுவதிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். 



அந்த சுவரொட்டிகளில் எச்சரிக்கை மதுரை ஆதீனம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா என்ற கேள்வி வாசகங்களோடு வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து எங்களுக்கு ஜாதி மதம் எதுமில்லை தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு எதிரான விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் ஏற்கனவே அரசியல் ரதீயாக பேசிய கருத்துகள் பேசுபொருளாகிய நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் மதுரை ஆதீனம் இருவர்களிடையேயான போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது.