உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரி மதுரை எம்.பி சு.வெங்கடேசன்  எழுதிய கடிதத்திற்கு மத்திய  நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கரத் பதில் அளித்துள்ளார். 






 

அதில்..,"வெளியுறவு அமைச்சக கணக்குப்படி 22500 இந்தியர்கள், பெரும்பாலும் மாணவர்கள், பிப்ரவரி 1, 2022 க்கு பிறகு உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உக்ரைனில் இருந்து  மேலை நாடுகளுக்கு இடம் பெயர்ந்த இந்தியர்களுக்கு தங்குமிடம்,  மருத்துவம், உணவு உள்ளிட்ட எல்லா உதவிகளையும் அரசு செய்து "ஆபரேசன் கங்கா" திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட விமானங்கள் மூலம்  இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். 



இன்னும் உக்ரைன் நிலைமைகள் தெளிவாகவில்லை. அங்கு நடந்தேறி வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு நிலைமை சீர் அடைந்தவுடன் எல்லா தாக்கங்களையும் மதிப்பிட்டு, தீர்வுகளுக்கான வழிகளையும் பரிசீலிப்போம். இடைக்கால நடவடிக்கையாக,   நாடு திரும்பியுள்ள மாணவர்களின் கல்விக் கடன் மீது  உக்ரைன் மோதல் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து  உரித்தான மட்டங்களில் கலந்தாலோசனை செய்யுமாறு இந்திய வங்கியாளர் கூட்டமைப்பை (I.B.A) அறிவுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். 



அமைச்சரின் பதிலுக்கு மதுரை எம்.பி நன்றி

 

”கடிதத்தின் பதிலில் நம்பிக்கை தரும் வார்த்தைகள் இருந்தாலும், முடிவுகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். உக்ரைன் நிலைமை விரைவில் சீராக வேண்டும் என்று உளமார விரும்பினாலும் அதை கல்விக் கடன் ரத்து குறித்த பிரச்னையோடு இணைக்காமல்,  ஏற்கெனவே உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குகிற முடிவை உடன் எடுக்க வேண்டும்”. என சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.