உலகமே கொரோனா முதலாம் அலை தொடங்கி மூன்றாம் அலை என உயிருக்கு அஞ்சியும், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றியும் தவித்துவர கூடிய சூழல் நிலவுகிறது. பல இடங்களில் தொழிலும், வியாபாரமும் மந்தமான நிலைக்கு சென்றுவிட்டது. இதனை மீட்கும் முயற்சியாக பலரும் வித்தியாசமான யோசனைகள் கையில் எடுத்து வியாபாரத்திற்கு சூடு வைத்துள்ளனர். இதில் மதுரை(Madurai) மற்றும் சுற்று வட்டார வியாபாரிகள் வேற ரகம் என்று சொல்லும் அளவிற்கு வித்தியாசத்தை காட்டுகின்றனர்.

 


 

செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி, 1 கிலோ மீன் வாங்கினால் பெட்ரோல் இலவசம், ஒரு கிலோ கறி வாங்கினால் எண்ணெய், பலசரக்கு ஜாமான் இலவசம் என கவர்சிகர விளம்பரங்களை அள்ளித் தெளிக்கின்றனர். சமீபத்தில் வருவாய்த்துறை  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் மூன்று பிரிவு பிரியாணி இலவச ஆஃபர்களை அளித்து அட்ராசிட்டி செய்தார் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர். இந்நிலையில் மீன் கடை அறிமுக சலுகையாக ஒரு கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 



 

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக  மீன்கள் விற்பனையகம் துவங்கப்பட்டது. இங்கு மீன்கள் கடலில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்வதாக சொல்லப்படுகிறது. புதிதாக துவக்கப்பட்டுள்ள தனியார் மீன்கள் விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உரிமையாளரும், வழக்கறிஞருமான திருமுருகன் புது யுக்தியை கையில் எடுத்துள்ளார்.



 

அதாவது பகுதியாக நேற்று ஒரு நாள் மட்டும் முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ  மீன்கள் வாங்கினாலும் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் என்று அறிவித்தார், அதன்படி காலையில் திறக்கப்பட்ட மீன் கடையில் சுற்றுப்புற பகுதியில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் குவிந்தனர். உரிமையாளரும் வழக்கறிஞருமான திருமுருகன் தலைமையில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் கிட்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வாடிக்கையாளர்கள் பலரும் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். ஆனால் கொரோனா சமயத்தில் இவ்வாறான ஆஃபர்கள் மூலம் சமூக இடைவெளிகள் கடைபிடிக்காமல் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சமூக ஆர்வலர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்துகிறது.