மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமர். கிராமிய கலைக்குடும்பத்தில் இருந்து வந்ததால் அவருக்கும் கிராமிய கலைகள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அவரின் திறமைகளை பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்தி வந்தார். விஜய் டிவி மூலம் அறிமுகமாகி பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்து வருகிறார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஸ்பூப் செய்தபோது இவர் பேசிய ‘என்னம்மா இப்படி பன்றீங்களே மா’ என்ற டயலாக் டிரெண்டானது.




டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு ஆப்களிலும் அதனை பேசத்தொடங்கினர். அதே போல் “ ஆத்தாடி என்ன ஒடம்பு” என்ற பாடலை நகைச்சுவையாக பாடியதும் டிரெண்டானது. இதற்கு பின் ராமருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். ராமர் நடிக்கும் காட்சிகள் அனைத்தையும் பொதுமக்கள் ரசித்து வருகின்றனர். இந்நிலையில் ராமர் குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேஷன் முகநூலில் போட்ட பதிவு தற்போது டிரெண்டாகி வருகிறது.






அதில் ” கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்திதேன். மகிழ்ச்சி" என பதிவிட்டிருந்தார்.  இதனால் ராமர் ஒரு வி.ஏ.ஓ.வா என பலரும் கேள்வி எழுப்பி ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.




இந்நிலையில் இது குறித்து மேலூர் தாசில்தார் இளமுருகு அவர்களிடம் பேசினோம்..,” ராமர் நல்ல கலைஞன். விடுமுறை நாட்களில் மட்டும் தான் சென்னைக்கு சென்று நடிக்கிறார். அதே போல் அவரின் கிராம நிர்வாக பணியையும் தொய்வில்லாமல் செய்யக்கூடியவர்” என்றார்.




மேலும் ராமருக்கு அடுத்தபடியாக உள்ள ஆர்.ஐ கண்ணனிடம் பேசினோம்..,” ராமர் விடுமுறை நாட்களில் மட்டும் தான் நடிக்க செல்கிறார். 2 மாத புரோகிராமை 2 நாட்களில் நடித்து முடித்துவிடுவாராம். அதனால் தான் அவரால் இங்கேயும் பணி செய்ய முடிகிறது. 18 சுக்காம்பட்டி கிராமத்தில் மக்கள் தொகை குறைவு என்பதால் வேலைகளும் விரைவாக முடிந்துவிடும். ஆன்லைன் பதிவு என்பதால் வேலை இன்னும் வேகமடையும். ராமர் கிராம நிர்வாக வேலையை சிறப்பாக செய்து வருகிறார். சின்னத்திரையில் நடிப்பது அவருக்கு டைம்பாஸ் போல தான். வி.ஏ.ஓ., பணியையும் வெகு சிறப்பாக செய்வார்” என பெருமைகொண்டார்.


இதைப்ப படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Watch Video: ‛உங்க அநியாயத்திற்கு அளவே இல்லையா...’ நண்பர் திருமண போஸ்டரை ஒட்ட, பொக்லைனோடு வந்த ஜேசிபி கேங்!