ஓட்டல்காரர் திருமணம் என்றால் அருசுவை உணவு இருக்கும், குளிர்பானம் தயாரிப்பவர் இல்ல திருமணம் என்றால் சுவையான கூல்ட்ரிங்ஸ் கிடைக்கும், காய்கறிக் கடைக்காரர் திருமணம் என்றால் அவர் வீட்டு விருந்தில் நல்ல படையல் இருக்கும். அதே திருணம்... ஒரு பொக்லைன் இயந்திர உரிமையாளர் வீட்டில் நடந்தால்? இப்படி தான் நடக்கும் என நிரூபித்திருக்கிறார்கள். 




சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தனர் பாலாஜி. பொக்லைன் இயந்திர உரிமையாளராக உள்ளார். பெரும்பாலும் நம்ம ஊரில், பிராண்ட் பெயரை பொருளின் பெயராக குறிப்பிடுவது உண்டு. அது போல் தான், பொக்லைன் இயந்திரத்தையும் ஜே.சி.பி., என்று அழைப்பதுண்டு. அந்த வகையில் பாலாஜி, ஒரு ஜே.சி.பி., இயந்திர உரிமையாளர். அவருக்கு நெருக்கமான நண்பர்கள், ஜேசிபி நண்பர்கள் என்கிற பெயரில் அங்கு அறியப்பட்டுள்ளனர். 




ஜேசிபி நண்பர்களின் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி நடந்தால், அதை கொண்டாடித் தீர்ப்பது அவர்கள் வழக்கம். அந்த வகையில், ஜேசிபி டீமின் தலைவரான பாலாஜிக்கு திருமண ஏற்பாடு நடந்தது. ஜூன் 1 ம் தேதி அவருக்கு திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் ஜேசிபி நண்பர்கள் குதித்தனர். மெகா போஸ்டர் அடித்த அவர்கள், அதில் பாலாஜி மற்றும் அவரது வாழ்க்கை துணையின் போட்டோ உடன், தங்கள் போட்டோவையும் போட்டனர். அதுமட்டுமல்லாமல், வழக்கம் போல ஜேசிபி நண்பர்கள் என்கிற பெயரில் அந்த போஸ்டர் அச்சிடப்பட்டது. 




ஜேசிபி உரிமையாளர் திருணம், ஜேசிபி நண்பர்கள் ஏற்பாடு என்று இருக்கும் போது, ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமே என்று எண்ணிய நண்பர்கள், போஸ்டரை ஒட்ட ஜேசிபி என்கிற பொக்லைன் இயந்திரத்தோடு மானாமதுரை தெருக்களில் வலம் வந்தனர். சைக்கிளில் தான் பெரும்பாலும் போஸ்டர்கள் ஒட்டுவார்கள். ஒரு கட்டத்தில் அது பைக்காக மாறியது. பெரிய கட்சி நிகழ்வுகள் என்றால், காரில் வந்து போஸ்டர் ஓட்டுவார்கள். இதை தான் நாம் பார்த்திருக்கிறோம். 


ஆனால், ஜேசிபி நண்பர்கள் என்பதை காட்டுவதற்காக, ஜேசிபி இயந்திரத்தோடு வந்த நண்பர்கள், மெகா போஸ்டரை, ஜேசிபி வாகனத்தின் உதவியோடு சுவர்களில் ஒட்டத் தொடங்கினர். பார்க்கும் போதே பிரமிப்பாக இருந்த அந்த நிகழ்வை, அவ்வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு, கடந்து சென்றனர்.





திருமண மேடையில் தான் பொதுவாக நண்பர்களின் கலாட்டாக்கள் இருக்கும். திருமணத்திற்கு இரு நாட்களுக்கு முன்பே, ஜேசிபி இயந்திரத்தோடு போஸ்டர் ஒட்டப்புறப்பட்ட நண்பர்களின் செயல், கொஞ்சம் ஓவர் தான்; என்றாலும், நட்புக்கு முன்பே எதுவும் பெரிதல்ல என்பதை தான் இது காட்டுகிறது. 


‛போஸ்டருக்கே பொக்லைன் என்றால், மொய் இதை விட பெரிய வாகனத்தில் போகும் போல...’ என, பலர் கலகலத்து கடந்து சென்றனர்.