திருமணம் செய்து வைக்குமாறு கூறிய அண்ணன் மகனுக்கு அறிவுரை கூறியவரை கொலை செய்த வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் விவசாயி. அவரது அண்ணன் மகன் சேகர் (எ) ராஜசேகர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது தந்தையிடம் கூறியுள்ளார். அப்போது மாடசாமி "முதலில் வேலையை தேடு பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம்" என அறிவுரை கூறியுள்ளார். இதனால் ராஜசேகர் மாடசாமியின் மீது கோபத்திலிருந்துள்ளார்.

 

மறுநாள் வயலில் மாடசாமி அவரது மனைவி காளியம்மாள் இளைய மகள் தங்கமணி ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மாட்டு வண்டியில் மாடசாமி அமர்ந்திருந்த போது ராஜசேகர் அருகில் அமர்ந்து அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் அவருடைய கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மாடசாமி உயிரிழந்துள்ளார்.

 

பின்னர் காளியம்மாள் தனது மூத்த மகள் பழனியம்மாளை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் ராஜசேகர்  கைது செய்யப்பட்டதோடு அதற்காக பயன்படுத்திய ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் ராஜசேகருக்கு 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆயுள் தண்டனை வழங்கியதோடு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவை எதிர்த்து ராஜசேகர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் சாட்சிகள் முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கிழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையில் முரண்கள் இருப்பதாக தெரியவில்லை. ஆகவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கீழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.



 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண