மதுரை, மேலூர், கருங்காலக்குடி கிராமத்தைச் சேர்ந்த விசுவநாதன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மாவட்டம், மேலூர், கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடி கிராமத்தில் உள்ள நிலமற்ற  ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அப்பகுதியில் 200 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  ஆதிதிராவிட நலத்துறை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.


இந்த நிலையில் விதிகளை மீறி வசதி படைத்த ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஒதுக்க பணிகள் நடந்து வருகிறது. எனவே, கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடியில் நிலமற்ற ஏழை ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து நாளிதழில் விளம்பரம்  வெளியிட வேண்டும். மேலும்  ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ஒரு குழு அமைத்து, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து அதன் பின்பு இலவச வீட்டு மனை பட்ட வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். 


இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபத்யாய்,   கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு  தரப்பில், மனுதாரர் கூறுவது போல் யாருக்கும் தற்போது வரை இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,  நிலமற்ற ஏழை ஆதிதிராவிட பயணாளிகளுக்கு, இலவச வீட்டு மனை பட்டா எந்த விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.   என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.