விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழில் 'வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரிலும் இந்தத்திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் வெளிவர இருக்கும் இந்த திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் பொங்கல் ரிலீஸ் என தள்ளி வைக்கப்பட்டது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளி அன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக கதாநாயகனாக நடிக்க வேண்டியவர் உதயநிதி ஸ்டாலின் என்றும் உதயநிதியை எப்பொழுது முதலமைச்சராகலாம் என மு.க.ஸ்டாலின் எண்ணிக்கொண்டிருப்பதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
மதுரையில் அ.தி.மு.க- வின் 51 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு டி.எம்.கோர்ட் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆவடி குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்,"அதிமுக ஆட்சி காலத்தில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம் என பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அம்மா கொண்டு வந்தார். பெண்ணை கரை சேர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தெரியாது, அவர் பணக்கார வீட்டுப்பிள்ளை, ரிக்சா ஓட்டுபவர்கள்,பெயின்ட் அடிப்பவர்களின் நிலை அவருக்கு தெரியுமா? படித்தவர்கள், பணக்காரர்கள் மட்டுமே அவருக்கு தெரியும். தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் முதலைச்சரையே இந்த பாடு படுத்துகிறார்கள் என்றால், மக்களை என்ன பாடுபடுத்துவார்கள் என்று அவருக்கு தெரிய வேண்டாமா? ஓசி ஓசி என பேசும் திமுக அமைச்சர் அனுபவிக்கின்ற அனைத்தும் ஓசி தான்.
நான் ஒரு டான் என கூறும் நிதியமைச்சர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நாங்கள் மகளிருக்கான உரிமைத் தொகை குறித்து கேட்டதற்கு, "நாங்கள் கொடுக்கின்ற திட்டங்களில் குறைபாடுககள் வரக்கூடாது, அதனால் சீர்திருத்தம் செய்வதாக கூறுகிறார்" இதற்கு ஒரு அமைச்சர் தேவையா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தான் நிதியமைச்சராக இருப்பதாக பி.டி.ஆர் கூறுகிறார், ஆனால் புரட்சித்தலைவர் இருந்திருந்தால் எடுபுடியாக இவரை வைத்திருந்துப்பார், புரட்சித்தலைவருடன் ஒப்பிட்டால் முதலமைச்சரே ஓத்துக்கொள்ள மாட்டார். நிதியமைச்சர் நீண்ட நாள் பதவியில் இருக்க வேண்டும், அவர் டான் என்றால் நாங்கள் சூப்பர் டான், அடுத்த ஆற்காடு வீராசாமி இவர்தான். உதயநிதி ஸ்டாலின் எப்பொழுது செங்கலை தூக்கினாரோ, அப்பொழுதே செங்கல் கம்பி விலை உயர்ந்துவிட்டது. புதிய வாகன சட்டம் லஞ்சத்திற்கு வழிவகுக்கும், எனவே விதி மீறுபவர்கள் மீது அபராதம் வசூலிப்பதை விட சட்டரீதியாக அணுக வேண்டும்.
திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் ஒன்று கூடி விட்டனர், கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டு வெடிப்பை போல் தற்போது கோவையில் கார் வெடித்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேயரை எதிர்த்து அமைச்சரே உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறுவது நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக திமுக ஆட்சி இருக்கின்றது. வாரிசு திரைப்படத்தில் விஜய் கதாநாயகநாயக நடிக்கிறார், ஆனால் அந்த படத்தில் நடிக்க வேண்டியவர் உதயநிதி, கதை கலைஞர் , திரைக்கதை முதலமைச்சர் ஸ்டாலின் தான் உதயநிதியை எப்போது முதலமைச்சராகலாம் என எண்ணிக்கொண்டிருக்கிரார் ஸ்டாலின்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்