பிரபல டீ தூள் நிறுவனமான 3 ரோசஸின் விற்பனை நிலவரங்கள், பொருளின் தரம் உள்ளிட்டவை குறித்து கண்காணிக்கும் பணிகளை பெங்களூரை சேர்ந்த ஐ.பி.ஆர். சர்வீஸ் கம்பெனி மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவன பிரதிநிதியான சோமசுந்தரம் என்பவர், மதுரை அனுப்பானடி பகுதியில் 3 ரோசஸ் டீ தூள் விற்பனை குறைவானது குறித்து நேற்று ஆய்வு செய்ய வந்தார்.



அப்போது, அனுப்பானடி சின்னக் கண்மாய் அருகேயுள்ள சிறிய குடோன் ஒன்றில் 3 ரோசஸ் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி, இரசாயன நிறமிகள் சேர்த்து டீ தூள் தயாரித்து வந்ததையும், அதை தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்ததையும் கண்டறிந்தார்.



உடனடியாக தெப்பக்குளம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அனுப்பானடியை சேர்ந்த விக்னேஷ் குமார் (33) மற்றும் ஐராவதனல்லூரை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (38) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ எடையுள்ள போலி டீ தூள் மற்றும் அது தயாரிப்பதற்கு பயன்படுத்தி வந்த கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.  இந்த குற்றவாளிகளில் சவுந்தரபாண்டியன் என்பவர் கடந்த 2021ல் இதே போல போலியான டீ தூள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.