விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு

 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி. சாலை பகுதி வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டிற்கு பந்தல் கால் நடுதல் கடந்த 4-ம் தேதி அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதிகட்சிக் கொடியையும், கொடிப்பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து மாநில மாநாடு விரைவில் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் வருகின்ற 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.

 


 


பிரசித்தி பெற்ற மதுரை பாண்டிக் கோயிலில் தொண்டர்கள் சிறப்பு வழிபாடு

 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக மதுரையில் பிரசித்தி பெற்ற பாண்டி கோயிலில் தொண்டர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அங்குள்ள நடைபாதை வியாபாரிகள், போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து தாம்பூலத்துடன் வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து அழைப்பிதழ் வழங்கினர். குறிப்பாக தொண்டர்களையும், பொது மக்களையும் வரவேற்று வித்தியாசமான அழைப்பிதழ்களை வழங்கியுள்ளனர்.


 

அந்த அழைப்பிதழ்களில்,

 

 நம்பி வாங்க, நல்லாட்சி தரப்போறாம் நாங்க.

விடியல் நாடகம் போதுங்க, விட்ற மாட்டோம் நாங்க. 

அம்மா - அப்பா சிந்தியுங்க,

வாரிசு அரசியல் செய்ய மாட்டோம் நாங்க. 

அக்கா - அண்ணா எங்க பக்கம்,

அடுத்த தலைமுறைக்கு வரப்போகுது வெளிச்சம்,

மது இல்லா, மதவாதம் இல்லா தமிழகம்,

மானமிகு தளபதியால் வரப்போகு நிச்சயம்,






50ஆண்டு திராவிட அரசியல் போதும்,

திரணியுள்ள தமிழன் வாரர் வாய்ப்பு தாருங்கள்,

தன்மான தமிழகம் அமைய தயங்காமல்,

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தாரீர்...

 

30,000 தொண்டர்களா?

 

போன்ற வாசகங்களுடன், இது போன்ற அழைப்பிதழ்கள், சுவரொட்டிகள் திமுகவினரை சீண்டி பார்க்கும் வாசகத்துடன் மதுரையில் தவெக வின் அழைப்பிதழ், வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து தவெக மாநாட்டிற்கு மதுரை மாவட்டத்திலிருந்து 30,000 தொண்டர்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினரின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்றி தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.