மதுரையில் இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

பரவை சந்தையில் பணிபுரிந்து வரும் சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

 

மதுரை மாநகர் செல்லூர் அருகே உள்ள மீனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன் என்ற குட்டை அஜித். இவர் மதுரை மாவட்டம் பரவை பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பரவை சந்தையில் பணிபுரிந்து வரும் சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இதனால் அவ்வப்போது வாக்குவாதமும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இரவு பணி முடித்துவிட்டு செல்லூர் மேம்பாலத்திற்கு கீழ் குட்டை அஜித் நின்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த கும்பல் ஒன்று அஜித்துடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.


 

தலையில் கல்லை போட்டு  தாக்கியுள்ளனர்

 

அப்போது திடீரென அந்த கும்பலானது அஜித்தின் தலையில் கல்லை போட்டு  தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்து அஜித் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் அந்த கும்பல் தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்லூர் காவல்  காவல்துறையினர் அஜித்தை மீட்ட போது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

 

பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற கொலை

 

இதை தொடர்ந்து கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் மோப்பநாய் உதவியுடன்,  தடயவியல் நிபுணர்கள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். மேலும் கொலை நடைபெற்ற சம்பவ இடத்தில் காவல்துறை துணை ஆணையர் மதுக்குமாரி தலைமையிலான தனிப்படையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டாரா ? இல்லை வேறு ஏதும் காரணமா? என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும்

 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், “மதுரை மாநகர் செல்லூர், அனுப்பானடி, ஆரப்பாளையம், சிம்மக்கல், வண்டியூர் என பல்வேறு இடங்களில் குற்றசம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கஞ்சா விற்பனையும் அமோகமாக இருக்கிறது. எனவே காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அப்போது தான் குற்ற செயல்களை குறைக்க முடியும்” என தெரிவித்தனர்.