கடந்த  சில நாட்களுக்கு முன்னர் பாம்பன் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென அபாய ஒலி எழுப்பப்பட்டது.  இதனை அடுத்து ரயில்வே பொறியாளர்கள் ரயில் போக்குவரத்தை நிறுத்தினர். இந்த  நிலையில் ரயில்வே பொறியாளர்கள் சென்னை ஐ.ஐ.டி., வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய குழு கடந்த சில நாட்களாக ரயில் பாலத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பயணிகள் இல்லாத காலி ரயில் பெட்டிகளை பாம்பன் பாலத்தில் இயக்கி ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் முடிவில் பாம்பன் ரயில் பாலத்தில் சில பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியது கண்டுபிடிக்கப்பட்டது.



 

இந்நிலையில் பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து டிசம்பர் 31 முதல் ஜனவரி 9 வரை புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் வழி ரயில்கள்) மற்றும் ஜனவரி 1 முதல் ஜனவரி 10 வரை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் வழி ரயில்கள்) ராமேஸ்வரம் - மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.



 

ஜனவரி 1 முதல் ஜனவரி 10 வரை திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி, மற்றும் அனைத்து மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல இதே காலத்தில் அயோத்தியா, புவனேஸ்வர், ஹூப்ளி, செகந்திராபாத் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வருகை தரவேண்டிய  வாராந்திர விரைவு ரயில்களும் ராமேஸ்வரம் - ராமநாதபுரம் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 



இருந்தபோதிலும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா, புவனேஸ்வர், ஹூப்ளி, செகந்திராபாத், கோயம்புத்தூர் செல்லும் வாராந்திர விரைவு ரயில்கள் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும். மற்ற வாராந்திர மற்றும் வாரம் மும்முறை சேவை ரயில்கள் மண்டபம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப் பட்டுள்ளது.