இந்தியாவிலேயே மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காடுகளின் பரிசு என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம்.
இந்த வாரத்தின் நாட்களான புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என ஐந்து நாட்கள் தொடர்விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களை நோக்கி படை எடுத்த வண்ணம் உள்ளனர். இதில் குறிப்பாக ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். கொடைக்கானல் நகரில் பல இடங்களிலும் இரவு நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. கொடைக்கானல் நகரில் இரவில் பொதுவாக நெரிசலே இருக்காது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக கடும் நெரிசல் இருந்தது.
ஆயுத பூஜை பண்டிகை பொதுவாக அக்டோபர் 2ம் வாரங்களில் வரும். ஆனால் இந்த முறை ஆயுத பூஜை, தசரா பண்டிகை அக்டோபர் 1, 2ம் தேதிகளில் வந்துள்ளது. இது காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் வந்துள்ளதால், பெற்றோர்களும் சொந்த ஊருக்கு செல்வதுடன், சுற்றுலா தலங்களுக்கும் செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அக்டோபர் 1, 2, 3, 4, மற்றும் அக்டோபர் 5 ஆகிய ஐந்து நாட்கள் தொடர்விடுறை அரசு ஊழியர்களுக்கு விடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் தொடர்விடுமுறை ஏற்கனவே காலாண்டு தேர்வை ஒட்டி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, கோவை உள்பட பல்வேறு பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். அதேபோல் பலர் ஊட்டி, கொடைக்கானல்,மூணாறு, வாகமன், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளார்கள்.
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநில பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்து வருகிறார்கள். இதுவழக்கமாக நடப்பது தான்.விடுமுறையையொட்டி, கடந்த 2 நாட்களாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதன் காரணமாக கொடைக்கானலின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், கார்களிலும், வேன்களிலும் வந்த சுற்றுலா பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்தனர்.
கடந்த 2 நாட்களை தொடர்ந்து இன்று 3-வது நாளாக இன்றும் கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்லும் சாலைகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. பிரதான சாலைகளில் கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்து போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.