மாணவர் பிரேம்குமார் அவர்கள் தமிழ்நாடு கபடி அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதற்கான ஆணையை வழங்கி வாழ்த்துக்களை அமைச்சர் தெரிவித்தார்.
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் 13 இடங்களில் நடந்து வருகிறது. அதில் மாநில அளவிலான தடகள போட்டிகள் அமைச்சர் மூர்த்தி தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டு திருமலைகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பல்வேறு பரிசுகள்
இதில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 72 மேலாளர்கள் என மொத்தம் 800-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று 3-ந் தேதி தொடங்கி இன்று 4-ந் தேதி வரையிலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 5-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரையிலும், கிரிக்கெட்போட்டிகள் 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும் நடக்கிறது. போட்டியில் முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் இடம் பரிசாக ரூ.75 ஆயிரம், 3-ம் இடம் பரிசாக ரூ.50 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படும்.
பரிசு பெற்ற வீரர் - வீராங்கனை
நேற்று தொடங்கிய 1500 மீட்டர் ஓட்டபந்தயத்தில் மாணவர்கள் பிரிவில் உதயச்சந்திரன் (சென்னை) முதலிடம், வத்தின் (சிவகங்கை) 2-ம் இடம், சிதம்பரராஜா (தூத்துக்குடி)3-ம் இடம் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் தன்சிகா (சென்னை) முதலிடம், சரஸ்வதி (மயிலாடுதுறை) 2-ம் இடம், கவுசிகா (விருதுநகர்) 3-ம் இடம் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர், கலெக்டர் ஆகியோர் சான்றிதழ்கள், பதகங்களை வழங்கினர். போட்டி ஏற்பாடுகளை மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அதிகாரி (பொறுப்பு) முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
தமிழ்நாடு கபடி அணியில் விளையாடுவதற்காக தேர்வு
இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்ட வீரர், வீரங்கனைகள் கலந்துகொண்டனர். அவர்களின் அணிவகுப்பினை அமைச்சர் ஏற்றுக்கொண்டு தீபச் சுடரை ஏற்றிவைத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிரேக்கிங் டான்ஸ் போட்டியின் டெமோ நிகழ்ச்சியானது நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது. இதே போல் மதுரை மாவட்டம், சிறுதூர் கோபால கிருஷ்ணன் மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரேம்குமார் அவர்கள் தமிழ்நாடு கபடி அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதற்கான ஆணையை வழங்கி வாழ்த்துக்களை அமைச்சர் தெரிவித்தார்.