1. சிவகங்கை மாவட்டத்தில் 17 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் காரைக்குடி சங்கரா புரத்தில் மட்டும் 6 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2. சிவகங்கை மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு செப்டம்பரிலேயே விவசாயிகள் சாகுபடியைத் தொடங்கினர். ஆனால், 3 மாதங்களாகியும் உரத்தட்டுப்பாடு பிரச்னை முழுமையாகத் தீர வில்லை. பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் உரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. ஒருபுறம் மாநிலம் முழுவதும் உரத்தட்டுப்பாடு நிலவினாலும், வந்த உரங்களை விநியோகிப்பதில் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாததால் கடும் தட்டுப்பாடாக மாறியுள்ளது.
3. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை பதுக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
4. தொடர் மழையின் எதிரொலி காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சூரங்குடி, குளத்தூர், வேடப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1800 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு,மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நிலங்களில் மழைநீரால் பயிர்கள் அடித்து செல்லபட்டு நிலங்களில் மழைநீர் மட்டும் தேங்கி காணப்படும் நிலை உள்ளது.
5. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மஞ்சள் பட்டினம் பகுதியில் பரமக்குடி நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மதிய உணவின்போது தலா ஒரு முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 5 நாட்கள் விடுமுறை நாள் என்பதால் பிள்ளைகளுக்கு முட்டையை வேக வைக்காமல் அப்படியே கொடுத்துள்ளனர். இதனை பெற்றோர்கள் வீட்டில் நேற்று சமைப்பதற்காக இந்த முட்டைகளை வேக வைத்த பொழுது அதிலிருந்து ஒரு துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்கன்வாடி மையத்தில் முறையிட்டு ஏன் இப்படி கெட்டுப்போன முட்டைகளை வழங்குதிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
6. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பம் செய்யும் போது அவரின் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட கோரிய பொது நல மனு தீர்ப்புக்காக ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
7. நெல்லை மாநகர ஆயுதப்படை உதவி ஆய்வாளர் கண்ணதாஸ் என்பவரின் மகன் என்ஜினியரிங் பட்டதாரியான செல்வம் என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
8. நெல்லை கூடங்குளத்தில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னையால் வயதான பெண்ணை ( வள்ளியம்மாள் ) கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் புரோஸ்கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
9. வைகை அணையில் நீர் வரத்து சுமார் 71 அடியை எட்டியதால் உபரி நீர் வெளியெற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
10 மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 11 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75321-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 11 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74008-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1178 இருக்கிறது. இந்நிலையில் 135 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.