இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. ஆனால் இந்தியாவுக்கென்று அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்படவில்லை. இந்திய தலைவர்கள் அடங்கிய அரசியல் நிர்ணய சபையானது, அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கும் பணியை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வந்தது. இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது நவம்பர் 26 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையால்  ஒப்புதல் பெறப்பட்டது. அதையடுத்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. வெளிநாட்டவர்கள் தலையீடின்றி இந்தியாவுக்கு என்று ஒரு சட்டம்  நடைமுறைக்கு வந்த நாளே குடியரசு தின விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் 74-வது குடியரசு தின விழாவை வரவேற்கும் வகையில் மதுரை விமான நிலையம் முழுவதும் மூவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.





நாடு முழுவதும் குடியரசு தினம் நாளை  ஜனவரி 26- ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் மதுரை விமான நிலையம் முழுவதும் மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இந்த வண்ண விளக்குகளால் மிளிர்வதை பார்க்கும் பயணிகள் தங்கள் கைப்பேசிகளில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



மேலும் மதுரை விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் செல்ல வரும் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் விமான நிலையத்தை சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில் நுழையும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் வெடிகுண்டு கருவிகளாலும் பயணிகளின் உடமைகளை மோப்ப நாய்களை வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.