மதுரை எஸ்.எஸ். காலனி எம்.ஆர்.பி. மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  147 பயனாளிகளுக்கு ரூ.18.14 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில்,  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்..,”மக்கள் நலன் சார்ந்த சிந்தனை, மனிதநேயம், இரக்கம் ஆகிய மூன்று பண்புகள் தலைசிறந்த தலைவர்களின் அடையாளமாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் இந்த 3 பண்புகளை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களாக உள்ளன. ”எல்லோர்க்கும் எல்லாம்” என்ற அடிப்படையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் திராவிட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.



 

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்து மக்கள் பணியாற்ற வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். அந்த வகையில், பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் தொடர்ந்து செயலாற்றி வருகின்றோம். வருவாய்த்துறையின் மூலம் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை போன்ற மாதாந்திர உதவித்தொகை பெறத் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் விடுபடாமல் உதவித்தொகை வழங்கிட வேண்டுமென்ற நோக்கில் இத்தகைய அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 



தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்பு மதுரை மத்திய தொகுதியில் மட்டும் இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியோடு சேர்த்து மொத்தம்  7 அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 1,100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 



 

அதேபோல, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிர் சுதந்திரமாக செயல்பட்டு மேம்படவும், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றின் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி அலுவலகத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.