சிவகங்கையில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டம் முதலாம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழாவைக் கொண்டாடியது. கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், கவியரங்கம் என மூன்று அரங்கமாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது.

 

நிகழ்வின் தொடக்கமாக உலகத்திருக்குறள் கூட்டமைப்பினர் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். விழாவிற்கு வந்தோரை திருமதி மு.சகுபர் நிசா பேகம்  வரவேற்றார், தேசிய நல்லாசிரியர் செ. கண்ணப்பன் தலைமை வகித்தார், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டத் தலைவர் சோ.சுந்தர மாணிக்கம், துணைத் தலைவர் மு.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



 

திருக்குறளை வாழ்வியலாக கொண்டு திருக்குறள் பரப்பும் பெரும் பணியை செய்து வரும் கல்லலைச் சேர்ந்த திருக்குறள் பரப்புநர் சி.முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழு தலைவருமான நா. சுந்தரராஜன், சிவகங்கை அரிமா சங்கத் தலைவர் க.முத்துக்குமரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (ஓய்வு) இளங்கோவன், கலைமகள் ஓவியப்பள்ளி ஓவியர் நா.முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை மூத்த வழக்கறிஞர் மு. இராம் பிரபாகர், நல்லாசிரியர் பா.முத்துக்காமாட்சி, மருத்துவத்துறை கண்காணிப்பாளர் இரமேஷ் கண்ணன், ( jci )உலக இளையோர் கூட்டமைப்பு செயலர் ஹரிஹரசுதன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மண்டல பொறுப்பாளர் புலவர் மாமணி ஆறு. மெய்யாண்டவர், க.கீர்த்திவர்சினி, கா.நனி இளங்கதிர், ப.யோகவர்ஷினி, க.முத்துலட்சுமி ஆகியோர் குறளால் பாராட்டு செய்யப்பட்டனர்.



 

வள்ளுவத்தைப் பாடுவோம் எனும் பொதுத் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது, இக் கவியரங்கத்திற்கு புலவர் கா.காளிராசா தலைமையேற்று தலைமைக் கவிதை பாடி வழி நடத்தினார். உடுக்கை இழந்தவன் கை போலே எனும் தலைப்பில் முனைவர் உஷா, அன்பின் வழியது உயிர்நிலை எனும் தலைப்பில் கவிஞர் பீ. பி.எஸ் எட்வின், அறிவு அற்றம் காக்கும் கருவி எனும் தலைப்பில் முனைவர் இரா.வனிதா, எண்னென்ப ஏனை எழுத்தென்ப எனும் தலைப்பில் ஆசிரியர் மாலா, உறங்குவது போலும் சாக்காடு எனும் தலைப்பில் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ், ஈதல் இசைபட வாழ்தல் என்னும் தலைப்பில் கவிஞர் சரண்யா செந்தில், யான் நோக்கும் காலை நிலன்நோக்கும் என்ற தலைப்பில் கவிஞர் அகமது திப்பு சுல்தான், முயற்சி திருவினையாக்கும் என்ற தலைப்பில் கவிஞர் பிரீத்தி அங்கயற் கண்ணி ஆகியோர்கவிதை பாடினர், ஆசிரியர் ந. இந்திரா காந்தி, செல்வி கா.நவ்வி இளங்கொடி  நிகழ்வை தொகுத்து வழங்கினர்.

 அரிமா முத்துப்பாண்டியன், லோபமித்ரா, மகேந்திரன்,- அந்தோணி பிரான்சிஸ் ஜெயப்பிரியா ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக  செயல்பட்டனர். தவழும் மாற்றுத்திறனாளிகள் தாய் இல்ல  ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், இரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், பாரதி இசைக் கல்விக் கழக யுவராஜ், தமிழாசிரியர் அயோத்தி கண்ணன் போன்றோர் நிகழ்வில் கலந்து கொண்டனர், இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புலவர் கா. காளிராசா செய்திருந்தார், இந்நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் வே.மாரியப்பன் நன்றியுரைத்தார்.