சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கோர விபத்து: 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திருப்பத்தூர் சாலையில் கும்பக்குடி பாலம் அருகே  கோயம்புத்தூரில் இருந்து காரைக்குடி சென்ற அரசு பேருந்தும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பேருந்தும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

மேலும் பேருந்தில் பயணித்த 40-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பேருந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். 

Continues below advertisement

சம்பவ இடத்திற்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர், திருப்பத்தூர் காவல் துறையினர் ஆகியோர் விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த சாலை குறுகலாக இருப்பதால் இதுவும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒரே வாரத்தில் 2வது பெரிய விபத்து: 

இதே போல் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தனியார் எம்.ஆர்.கோபாலன் பேருந்து கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. மற்றொரு பேருந்தான கே.எஸ்.ஆர்  ராஜபாளையத்தில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. இதில் கே.எஸ்.ஆர். பேருந்து தடம் மாறி கோபாலன் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் 30-க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல்வர் இரங்கல்: 

இந்த விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தியறிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உடனடியாக மாவட்ட ஆட்சியரையும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன். என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.