சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யானைத் தந்தம் கடத்தியதாக 8 பேர் கைது
தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினங்கள் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை, மதுரை, ராமநாதபுரம் மண்டலங்களின் வனப்பணியாளர்கள் மற்றும் சிவகங்கை வனச்சரக பணியாளர்கள் சிவகங்கை வனச்சரகத்துக்கு உள்பட்ட அல்லூர் கிராமத்திலுள்ள வைகை நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணையில் 8 பேர் சிக்கினர்
அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 யானைத் தந்தங்களையும், 6 மான் கொம்புகளையும் வனத்துறையினர் கைப்பற்றினர். இதைப் பதுக்கி வைத்திருந்த இளையான்குடியைச் சேர்ந்த தினேஷ் (26) என்பவரை பிடித்து வன அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் டெல்லி ஜெயசூர்யா (26), ரகு (31), சிவகங்கை காசிநாத துரை (54), அசோக் (46), மதுரை முருகேசன் (63), கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த மல்லப்பன், காளையார்கோவில் பாஸ்கரன் என்ற கண்ணன் (48) ஆகிய 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சிறையில் அடைப்பு
அதில், 2 யானைத் தந்தங்கள் மற்றும் 6 மான் கொம்புகளை கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த மல்லப்பனிடமிருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 8 பேரையும் வனத்துறையினர் கைது செய்து, சிவகங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் 7 பேர் சிவகங்கை மாவட்ட சிறையிலும், முருகேசன் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டார்.
காவலர் ஒருவருக்கும் தொடர்பு?
மேலும், இந்த வழக்கில் வேறு யாரும் தொடர்புடையவர்களா என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் நபர் முதல் நிலை காவலர் ஒருவர் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் எத்தனை பேர் உள்ளார்கள் என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.