வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் தாக்கத்தால் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதியிலும் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டது.
இதனால், கடந்த திங்கள்கிழமை அணைக்கு வினாடிக்கு 5,135 கன அடி அளவுக்கு நீா்வரத்து அதிகரித்து. பின்னா், மழைப் பொழிவு குறைந்ததால், நீா்வரத்து சனிக்கிழமை நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 991 கன அடியாக சரிந்தது. தற்போது இன்று அணையின் நீா் மட்டம் 140 அடியாக ( மொத்த உயரம் 152 அடி) உள்ளது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விவசாயம், குடிநீருக்காக வினாடிக்கு 1,600 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏற்கனவே நிரம்பி வழியும் பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், 278 கன அடி உபரி நீர் வெளியேறுவதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 126.28 அடி உயரத்தில் அமைந்துள்ள சோத்துப்பாறை அணை. நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த மாதம் சோத்துப்பாறை அணை அதன் முழுக்கொள்ளவை எட்டி உபரிநீர் வெளியேறியது.
இதையடுத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணையின் நீர்வரத்து 20 அடிக்கும் கீழ் குறைந்ததால் உபரிநீர் அளவும் குறையத் தொடங்கியது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக நேற்று முன்தினம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது. இதன் காரணமாக இன்று சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து 278 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர் முழுவதும் உபரிநீராக வராக நதியில் வெளியேறுவதால் பெரியகுளம் சுற்று வட்டார பாசனக் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியகுளம் பாசனப் பரப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதைத்து வனத்துறை அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் இன்று காலை திடீரென அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கும்பக்கரை அருவி நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகளின் கும்பக்கரை அருவியில் குளிக்கவும், அருவி பகுதிக்கு சென்று பார்க்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் கும்பக்கரை அருவிக்கு வரும் நீர் வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.