கடந்த சில காலமாகவே, தேனி மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கம்பம், குமுளி, கூடலூர் பகுதியில் கனமழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. ஆண்டிபட்டி மற்றும் கூடலூர், பெரியகுளம், மற்றும் பெரியாறு அணைப் பகுதிகளில்  மழை பெய்து வருகிறது.



இந்த நிலையில்  முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் லோயர் கேம்பில் இருந்து கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், பழனிச்செட்டிபட்டி வரை செல்லும் முல்லைப் பெரியாற்றில் சென்று வைகை அணையை அடையும். அணையில் திறக்கப்பட்டுள்ள 1,755 கன அடி நீருடன் கூடலுார், குமுளி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளை உள்ளடக்கிய, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும், தேனி மாவட்டத்தில் தேசிய பேரிடர்  மீட்புக் குழு மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் இருந்தது




இந்த நிலையில், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால், முல்லை பெரியாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், ஆற்று கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும்,  பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் சிறுவர்கள் ஆற்றுப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பெரியவர்கள் ஆற்று ஓரங்களில் துணி சலவை செய்ய வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்து இருந்தனர். ஆனாலும் தடையை மீறி ஆற்றுப் பகுதியில் சிறுவர்கள் குளிக்க சென்ற வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் ஒரே நாளில் மூன்று பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


தேனி மாவட்டம் முல்லை பெரியாற்றில் வெவ்வேறு இடங்களில் குளிக்க சென்ற மூன்று பேர் ஆற்றின் நீரில் மூழ்கி உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கம்பத்தை சேர்ந்த ஆமினா அவரது கணவர் அப்தாஹீர் தனது 12 வயது அனிசா என்ற மகளுடன் சின்னமனூர் அருகே குச்சனூர் செல்லும் முல்லை பெரியாற்றில் குளிக்க சென்றபோது, மகள் அனிசா எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்த நிலையில் மகளை காப்பாற்ற தந்தையும், தாயும் ஆற்றில் குதித்தபோது இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.




இதில் அனிசா (12) வயது சிறுமி தப்பினார். தாய் ஆமினா இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. அப்தாஹீர் உடலை முல்லை பெரியாற்றில் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். இதே போல் லோயர் கேம்ப் மின் வாரிய குடியிருப்பில் குடியிருந்து வரும் காமேஸ் என்ற 17 வயது சிறுவன் லோயர்கேம்ப் மின்வாரிய குடியிருப்பு பகுதிக்கு கீழ் உள்ள முல்லை பெரியாற்றில் குளிக்க சென்றபோது சிறுவர் ஆற்றில் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். உடலை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.


 மேலும் இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க, யாரும் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் மீண்டும் எச்சரித்து உள்ளனர்.