சிறந்த காளை மற்றும் மாடிபிடி வீரருக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் வண்ணம் தமிழகத்திலேயே முதன்முறையாக சிறந்த காளைக்கு டாடா ஏசி, சிறந்த மாடுபிடி வீரருக்கு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது.

 


மதுரை ஜல்லிக்கட்டு


தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே.


ஜல்லிக்கட்டு போட்டிக்காக ரூ.13 லட்சம் நிதி வழங்கிய 8 கிராம மக்கள் - மதுரையில் நெகிழ்ச்சி



 


ஜல்லிக்கட்டில் நெகிழ்ச்சி 

மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்தாண்டு கூடுதல் விருந்தாக கீழக்கரை பிரமாண்ட மைதானத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த சூழலில் மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள  பழமை வாய்ந்த தொட்டப்பநாயக்கணூர் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக - 8 கிராம மக்கள் ஒன்று திரண்டு சுமார் 13 லட்சத்து 73 ஆயிரம் ரொக்கம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.







தமிழகத்திலேயே முதன்முறையாக

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் ஜமீன் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை 9 மணிக்கு துவங்கியது. 8 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 493 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். திமிலுடன் திமிரி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். பல்வேறு காளைகள் மாடுபிடி வீரர்களின் கைகளில் சிக்காமல் சீறி பாய்ந்தன. சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும் வண்ணம் தமிழகத்திலேயே முதன்முறையாக சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட குலமங்கலம் வழக்கறிஞர் திருப்பதி காளைக்கு டாடா ஏசி வாகனம் பரிசாக வழங்கப்பட்டது, இதே போன்று 9 காளைகளை அடக்கிய பேச்சியம்மன்கோவில்பட்டியைச் சேர்ந்த கனி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது. திருப்பத்தூர் சீமான் முரசு காளைக்கும், 6 காளைகளை பிடித்த கீரிபட்டி சிவனேஸ்வரனுக்கும்  இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.



 

 

இப்போட்டியில் பங்கேற்று வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது எம்.ஆர். வெள்ளை என்ற காளை மதுரை போடி இரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சுமார் 47 மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்கள் காயமடைந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 7 பேர் மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உசிலம்பட்டி டி.எஸ்.பி., நல்லு தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூழலில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.