சைக்கிள் போட்டியில் கலந்து கொள்வதற்காக தனது உறவினரிடம் சைக்கிளை கடன் வாங்கி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீமதி, தனது முதல் போட்டியிலேயே முதல் பரிசை வசப்படுத்தி அசத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமண் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூலி தொழிலாளி ஜேசுதாஸ் - தாயம்மாள் தம்பதியினர். இத்தம்பதியினரின் மூத்த மகள் ஸ்ரீமதி புதியம்புத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீமதி தனது 13 வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். அக்கணம் பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் கலந்து கொள்வதற்காக தனது உறவினரிடம் சைக்கிளை கடன் வாங்கி போட்டியில் கலந்து கொண்டார் ஸ்ரீமதி. இவர் கலந்துக் கொண்ட தனது முதல் போட்டியிலேயே முதல் பரிசை வென்று அசத்தினார்.
இதனையடுத்து, பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்களையும், கோப்பைகளையும் பெற்ற ஸ்ரீமதி கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டார். வளரும் பயிருக்கு களைகள் இடையூறென முளைப்பதாய் தன்னை சூழ்ந்த வறுமையின் காரணமாக மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தேவையான சைக்கிள் வாங்க பணம் இன்றி தவித்து வந்துள்ளார் அவர். இதற்காக உதவி கேட்டு, பல்வேறு தரப்பினரின் வாயிற் படிகளையும் ஏறிஇறங்கிய அவருக்கு வாயில்தோறும் ஏமாற்றமும், நிராகரிப்பும் மட்டுமே மிஞ்சியுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பியிடம், தனக்கு சைக்கிள் வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து, ரூ. 5 இலட்சம் மதிப்பிலான புதிய சைக்கிள் ஒன்றை வழங்கினார். இந்த சைக்கிளின் மூலமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு குழு போட்டியில் தங்கப் பதக்கத்தையும், தனித்துப் போட்டியிட்டதில் வெள்ளிப் பதக்கத்தையும், கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியிலும் கலந்துகொண்டு 3-ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.
இந்நிலையில், தற்போது இஸ்ரேலில் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் "உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப்" போட்டியில் பங்கேற்பதற்கான பிரத்தியேக சைக்கிள் தனக்கு வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கோரிக்கை வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலில் சாதாரண சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று இருக்கிறேன். மாவட்ட அளவிலும், மாநில அளவில் விளையாட எனக்கு சைக்கிள் தேவைப்பட்டது அதற்காக கனிமொழி எம்பியிடம், சைக்கிள் கேட்டவுடன் உடனடியாக எனக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தார். சர்வேதச அளவில் விளையாட விலை உயர்ந்த சைக்கிள் தேவைப்பட்டது. இதனை கனிமொழி எம்.பியிடம் கூறினேன், உடனடியாக விலை உயர்ந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள டிராக் சைக்கிள் வாங்கி கொடுத்தார். இந்த சைக்கிள் கொண்டு இஸ்ரேலில் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் "உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப்" போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கனிமொழி எம்.பியிடம் சமர்ப்பிக்க இருக்கிறேன் என்று கூறினார். மேலும், இந்தியாவிலேயே இந்த விலை உயர்ந்த சைக்கிளை பயன்படுத்தபோகும் முதன் பெண் வீராங்கனை ஸ்ரீமதி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்