தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முனிச்சாலை பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., அமைப்புச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,விற்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய செல்லூர் கே.ராஜூ..," அ.தி.மு.க., இயக்கத்தை கட்டிக்காக்க தலைமையேற்று தி.மு.க.,வின் மக்கள் விரோத நடவடிக்கைகு எதிராக எடப்பாடியார் போராட்டம் அறிவித்துள்ளார்.


 





ஆட்சிக் கட்டில் அமர்ந்து  ஒன்றரை வருடத்தில் ஒன்றுமே தி.மு.க., செய்யவில்லை. ஸ்டாலின் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பொய்யை தான் அதிகம் சொல்கின்றனர். வாய்ச்சவடால் தான் பேசுகின்றனர். தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.  39 கோடியை ஒதுக்கீடு செய்து கலைஞர் நினைவிடம் கட்டுகிறார்கள். கலைஞர் பயன்படுத்திய பேனா உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிய பேனாவை கடலில் கட்ட போகிறார்களாம். சிமெண்ட் விலை அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு , வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து கொண்டிருக்கும் போது 81 கோடி ரூபாயில் பேனாவுக்கு சிலையா ? நினைவுச் சின்னம் கட்ட பணம் உள்ளது, வாக்களித்த மக்களுக்கு பணம் இல்லையா. ஸ்டாலின் அவர்களே நியாயமா இது. தமிழக மக்களுக்கு என்ன செய்தீர்கள்.



 

 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. இந்தியாவில் சட்ட ஒழுங்கு மோசமான மாநிலம் என்று சர்வே ஒன்று சொல்கிறது. இது வேதனையாக உள்ளது. நீட் தேர்வு, 7 பேர் விடுதலை உள்ளிட்டவை என்ன ஆனது . நீட் தேர்வை தி.மு.க., அரசு ரத்து செய்துவிடும் என மாணவர்கள் நம்பினார்கள். சூசகம் உள்ளதென தம்பி உதயநிதி தெரிவித்தார். இந்த வாக்குறுதியெல்லாம் என்ன ஆனது. அ.தி.மு.க., ஆட்சியில் இருக்கும் போது, பொங்கலுக்கு 5 ஆயிரம் கொடுக்க சொன்னீங்க ஆனால் தி.மு.க., ஆட்சியில் பொங்கலுக்கு அஞ்சு பைசா கொடுக்கவில்லை. லெஜண்ட் சரவணன் மாதிரி வரும் ஸ்டாலின் செஸ் போட்டிக்கு விளம்பரம் தருகிறார். ஆனால் செஸ் சாம்பியன்களை அந்த விளம்பரத்தில்  காணோம். பிரதமர் மகாபலிபுரம் வந்த போது பாரம்பரிய உடையில் வரவேற்றார்.



ஆனால் அவரின் படங்கள் கூட செஸ் போட்டிக்கு பயன்படுத்தப்படவில்லை. மதுரையில் 40 ஆண்டுகளாக, நிறையாத தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பி படகு சவாரி விட்டது எங்களது எடப்பாடி அட்சி. மதுரைக்கு திமுக அரசு என்ன செய்தது. ஒரு அனிதா செத்ததுக்கு பயங்கரமாக போராடினாங்க, இப்ப  கள்ளக்குறிச்சி பிரச்னையில் ஆளும் கட்சியும், அதன் தோழமைகள் எங்கா போனார்கள்?. திருமாவளவன், வைகோவெல்லாம் எங்கே போனார்கள். திமுகவுக்கு சரியான எதிரி அதிமுகதான். திமுகவிற்கு அடுத்து நாங்கள்தான் என கூறுபவர்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஒரு பாடம். முல்லை பெரியாறு அணையை காப்பாற்ற வக்கு இல்லையா என முதல்வரிடம் கேள்வியை முன் வைக்கிறேன்" என்றார்.