திருப்பரங்குன்றம் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது. மலைமேல் சென்று வழிபாடு நடத்துவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் மலை மீது செல்ல அனுமதி இல்லை.
காவல்துறையினர் பாதுகாப்பு பணி
நேற்று 2-ஆவது நாளாக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் ஏற்கனவே தடையை மீறி வரவுள்ளதாக அறிவித்திருந்தனர். இதனால் மதுரை மாநகர் பகுதியில் 2500 காவல் துறையினரும் புறநகர் பகுதியில் 1500 காவல் துறையினர் என 4000 காவல் துறையினர் மாவட்டம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை மூலக்கரை பகுதி முதல் திருப்பரங்குன்றம் மலைமேல் வரையிலும் முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் மலைமேலுள்ள காசிவிஸ்வநாதர் கோவில் - சிக்கந்தர் தர்ஹாவிற்கு செல்ல நேற்று ஒருநாள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் பகுதியில் மட்டும் 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோதனைக்கு பின் அனுமதி
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பரங்குன்றம் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், மண்டபங்கள், தங்கு விடுதிகள் முழுவதுமாக அடைக்கப்பட்டது. திருப்பரங்குன்றத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. மேலும் தைப்பூச விழா நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டமாக செல்லக்கூடாது எனவும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்து அமைப்புகள் நடத்தக்கூடிய போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் இது போன்ற போராட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்ததாகவும், 144 தடை உத்தரவு உள்ளதால் பேருந்துகள், ரயில்கள் மூலமாக திருப்பரங்குன்றத்திற்கு வருகை தருவார்கள் என கருதி காவல்துறையினர் பேருந்துநிலையங்களிலும், பேருந்துகளிலும் சோதனையிடுவதோடு, ரயில் நிலையங்களிலும் சோதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது மலைமேல் சென்று வழிபாடு நடத்துவதற்கு மட்டும் அனுமதி என்றும், கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் மலை மீது செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை முதலே முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்
திருப்பரங்குன்றம் பகுதியில் இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மேலும் மலையுச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும் தர்காவுக்கும் வழிபாடு செய்வதற்கு பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இயக்கங்களோ கட்சிகளோ சார்ந்து கூட்டமாக செல்வதற்கோ அல்லது பால், குடிநீர், பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் தவிர மற்ற உணவு பொருட்கள் எடுத்து செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று வழக்கம் போல காலை முதலே முருகனை தரிசனம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்று திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பைச் சார்ந்த 195 பேர் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அழகாய் மாறப்போகுது நம்ம மதுரை... இறுதிக்கட்டத்தில் பணிகள்..இதில் இவ்வளவு வசதிகள் வருகிறதா..?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - China Vs America: எனக்கே வரி ஏத்துறியா.? இந்தா வாங்கிக்கோ... அமெரிக்க இறக்குமதிக்கு வரியை போட்டுத்தாக்கிய சீனா...