தமிழ்நாடு முழுவதும் பங்குனி உத்திரம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக முக்கிய ஆலயங்கள் களை கட்டியுள்ளது. குறிப்பாக, முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
பழனி முருகன் கோவில்:
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.
இக்கோவில் சிறப்புகளான தைப்பூச திருவிழா, சஷ்டி விரதம் என பல்வேறு சிறப்பு விழாக்களுக்கு பிரசித்தி பெற்றது இந்த பழனி முருகன் கோவில். அப்படி கொண்டாடப்படும் விசேச நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
பங்குனி உத்திரம் திருவிழா :
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து, பாதயாத்திரையாக வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு தீர்த்தம் செலுத்தி வழிபடுகின்றனர்.
திருக்கல்யாண வைபவம்:
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆறாம் நாள் திருவிழாவான இன்று நடைபெற்றது. திருஆவினன்குடி கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் அருள்மிகு முத்துக்குமாரசாமி- வள்ளி, தெய்வானைக்கு திருமணம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் வெள்ளித்தேரேறி நான்கு கிரிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருமண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை ஞாயிற்றுகிழமை மாலை நடைபெறவுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழச்சியான முருகன்- வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி 23 ம் தேதி மாலையும், பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் 24 ம் தேதியும் நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்து கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மலை அடிவாரத்தில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகனுக்கு அபிஷேகம் செய்து தங்கள் ஊர்களுக்கு எடுத்து செல்வது வழக்கம். பஞ்சாமிர்தம் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் மலைவாழைப்பழம் சுமார் பதினைஐந்து லட்சம் பழங்கள் 300 டன் அளவிற்கு மலை அடிவாரத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குடகு, ஆடலூர், பன்றிமலை, சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களில் மலைவாழைப்பழங்கள் பழனிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், வாழைபழத்தின் தரத்தை பொருத்து ஒரு பழம் ரூ 6 முதல் 11 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டை விட விலை சற்று கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும், மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால் விளைச்சல் குறைந்து பழங்களின் வரத்து குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வரத்துங்கியுள்ளதால் இரண்டு தினங்களில் அனைத்து பழங்களும் விற்பனைஆகிவிடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.