19வது கூட்டத்திலேயும் கோரிக்கையை சொல்லிட்டேன், என்னோட வார்டிலயே எந்த வேலையும் நடக்கல - மேயரின் அருகில் அமர்ந்தபடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய துணைமேயரால் பரபரப்பு. மேயரிடம் திமுக உறுப்பினர்கள் இரு தரப்பாக வாக்குவாதம் - சலசலப்பு.


மதுரை மாநகராட்சி 19 ஆவது மாமன்ற கூட்டம் இன்று மேயர் இந்திராணி தலைமையில் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் பல்வேறு பணிகள் மற்றும் நியமனங்கள் தொடர்பாக 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய 54 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் நூர்ஜகான் மதுரை மாநகராட்சியில் குழு தலைவருக்கு உரிய மரியாதை மற்றும் அதிகாரம் மதிப்பதில்லை எனவும் கணக்கு குழு கல்வி குழு வேலை வாய்ப்பு குழு போன்றவை போன்ற தலைவர்களுக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கப்படுவதில்லை என கூறி மேயர் இந்திராணியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தார்.




அப்போது நூர்ஜஹானிற்கு ஆதரவாக சில திமுக மாமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக பேசியபோது, அவர்களுக்கே எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு திமுக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க இரு தரப்பாக வாக்குவாதம் செய்தனர். இதனால் மாமன்ற கூட்டமே உட்கட்சி மோதலால் தொடங்குவதற்கு தாமதம் ஆனது. இதனை தொடர்ந்து பேசிய மண்டலத்தலைவர்கள் கடந்த 19 கூட்டங்களாக பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசியுள்ளோம். அதுகுறித்து பதில கூட அளிப்பதில்லை, எனவே வரும் கூட்டங்களில் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என திமுக மண்டலத்தலைவர்கள் கூறியபோது அதற்கு பதிலளித்த மேயர் முதலில் நீங்க கூட்டத்தில முழுமையாக இருங்க பாதியில் வெளில போக கூடாது எனக்கூறி கிண்டல் அடித்தார்.



தொடர்ந்து கூட்டத்தில் மேயர் அருகே அமர்ந்திருந்த மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் பேசுகையில், “19 கூட்டத்திலேயும் கோரிக்கையை சொல்லிட்டேன், என்னோட வார்டிலயே எந்த வேலையும் நடக்கல , பக்கத்து வார்டில் ரோடு போடுறாங்க. ஆனால் என் வார்ட பாகுபாடு பார்த்து ரோடு கூட போடமாட்றாங்க” என தனது மனவேதனையை வெளிப்படுத்தினார். மேலும், ”நானும் பலமுறை அதிகாரிகளிடம் எனது வார்டில் நிலவும் குறைகள் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் நானே எந்த கேள்வி கேட்டாலும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய பதில் தருவதே இல்லை” என்றார். மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரே மாநகராட்சியில் பாகுபாடு உள்ளது, எந்த பணிகளும் நடக்கவில்லை என மேயருக்கு எதிராக கொதித்தெழுந்தனர். இதனால் மாநகராட்சி கூட்டமே சலசலப்பில் முடிவடைந்தது.


மேலும் மண்டலத் தலைவர்கள் பேசும்போது,மாநகராட்சி பகுதிகளில் பழுதான வாகனங்களை சீரமைக்காமல் தேங்கி கிடப்பதாகவும், சாலைகளில் திரியும் நாய், மாடுகள், பன்றிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.