தேனியில் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வைத்துள்ள தனியார் கல்லூரியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தேனி பாராளுமன்ற தேர்தல்
தேனி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையங்கள் மொத்தம் 1788 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவானது நடைபெற்றது. தேனி பாராளுமன்ற தேர்தலில் நடந்த வாக்குப்பதிவானது 64.72% பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு பாதுகாப்புடன் ஸ்ட்ராங்ரூமில் வாக்குப்பெட்டி
சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷஜீவனா தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து துணை ராணுவம், போலீசார் என வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ள தேனி கம்மவார் கல்லூரிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
CM Stalin: ”உழைப்பாளிகளின் குடும்பங்கள், பொருளாதாரம் உயர்ந்திடணும்”- முதல்வர் மே தின வாழ்த்து
வாக்குப்பெட்டி வைத்திருக்கும் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது
தனியார் கல்லூரியில் தனி அறையில் சிசிடிவி கண்காணிப்புடன் மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் தேனி மாவட்ட போலீசார் என பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் வாக்குப்பெட்டி வைத்திருக்கும் தனியார் கல்லூரியில் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதை அடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அவரை தடுத்து நிறுத்தி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் அந்த இளைஞரை ஒப்படைத்தனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வாக்குப்பெட்டி வைத்துள்ள தனியார் கல்லூரியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராஜேஷ் கண்ணன் என்றும் அந்தக் கல்லூரியில் முன்னாள் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கல்லூரி வளாகத்தை சுற்றி போலீசார் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.