தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் தேக்கப்படும் நீரானது தேனி ,திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தில் பருவமழை  தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலம்.




இடுக்கி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு அதிகப்படியான நீர் வரத்து இருந்ததால் அணையில் இருந்து வினாடிக்கு 1800 கன அடி வரை நீர் திறக்கப்பட்டது. மேலும் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மூல வைகை,  வருஷநாடு வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றிலும், குரங்கணி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக  கொட்டக்குடி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது. முல்லைப் பெரியாறு, வைகை ஆறு மற்றும் கொட்டக்குடி ஆறு ஆகிய மூன்று ஆறுகளில் இருந்தும் அதிகப்படியான நீர் வந்ததால் வைகை அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.




இந்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம்  கடந்த 30-ஆம் தேதி காலை 6 மணி அளவில் 66 அடியை எட்டியதையடுத்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் , நேற்று முன்தினம்  மாலை 5 மணிக்கு அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியதால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அணைக்கு வினாடிக்கு 2735 கன அடி நீர் வரத்து உள்ளதால் அணை வேகமாக நிரம்பி 70 அடியை எட்டி அணையில் 5825 மில்லியன் கன அடி நீர் தேக்கப்பட்டுள்ளது.




இதனால் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணையிலிருந்து 2,735 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது . இதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள நீரால் தேனி, திண்டுக்கல், மதுரை ,ராமநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலம் பாசனம் குடிநீர் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.