தேனி அருகே ஜம்புலிபுத்தூர் சேர்ந்த மலைச்சாமி மனைவி சாரதா இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு வேலை வேண்டுமா? உங்கள் விவரங்களை அனுப்புங்கள் என்று ஒரு SMS வந்தது. இதனை நம்பி, சாரதா தன்னுடைய பெயர், விலாசம், கல்வித்தகுதி போன்ற விபரங்களை அவர்கள் கூறிய எண்ணிற்கு அனுப்பி வைத்தார்.



பின்னர் பேசிய அந்த நபர் டெல்லி ஏர்போர்ட்டில் வேலை செய்வதாகவும் ஏர்போர்ட்டில் சாரதாவுக்கு வேலை தயாராக இருப்பதாகவும் அதற்காக முன்பணம் 2550 ரூபாயை செலுத்த வேண்டும் என்று கூறியதை நம்பி சாரதா அவர் சொன்ன வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினார். இதனையடுத்து அந்த நபர் போலி வேலை நியமன ஆணையை அனுப்பி மேலும் வேலைக்கு சேர வேண்டுமென்றால் இன்னும் பணம் செலுத்த வேண்டும் என்று சிறுக சிறுக 16 லட்சம் வரை பெற்றுள்ளார். ஆனால் அவை போலியான நியமன ஆணை என தெரியவந்ததால் சாரதா தேனி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் அவரிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐக்கள் சுல்தான் பாட்ஷா, திவான் மைதீன், ஆகியோர் தலைமையில் தனிப்படையினர் டெல்லி சென்று விசாரித்தனர்.



விசாரணையில் தமிழகத்தை  சேர்ந்த டெல்லியில் வசிக்கும் விஜய் (29) ராமச்சந்திரன் (33) கோவிந்த் (21) ஆகியோரை கைது செய்து அவரிடமிருந்து விலை உயர்ந்த  31 செல்போன்கள், லேப்டாப், கம்ப்யூட்டர், பிரிண்டர், 46 ஏடிஎம் கார்டுகள், சிம்கார்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் 3 பேரையும் போலீசார் தேனிக்கு அழைத்து வந்தனர்.



இதுகுறித்து எஸ்பி டோங்கரே பிரவீண் உமேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, குற்றவாளிகள் வேலை வாங்கி தருவதாக கூறி இணையதளம் வழியாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இந்த மூன்று பேரும் 20 மாவட்டங்களில் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனால் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


https://bit.ly/2TMX27X*