திருச்சியைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - சகுந்தலா தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்பட 2 மகள்கள் இருந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே  கருத்து வேறுபாடு நிலவியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சகுந்தலா , தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.  மறுநாள் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கிணற்றில் பிணமாக கிடந்தது. இதுகுறித்து செல்வராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  முதலில் சந்தேக மரணம் என போலீசார் விசாரித்தனர். பின்னர் நடந்த விசாரணையில் சகுந்தலாதான் குழந்தையை கிணற்றில் வீசியுள்ளார் என கொலை வழக்குபதிவு செய்து, போலீசார் சகுந்தலாவை கைது செய்தனர்.



இந்த வழக்கை திருச்சி மாவட்ட கோர்ட்டு விசாரித்து, சகுந்தலா மீதான கொலை வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் அவர் திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் அவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இதனால் ஜாமீனில் வெளியில் வந்த அவர், வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டில் அவரது அப்பீல் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது விவகாரம் குறித்து தகவல் அறிந்த வக்கீல் தாமஸ் பிராங்க்ளின் சீசர், சகுந்தலாவின் அப்பீல் மனு மீதான உயர்நீதிமன்ற  தீர்ப்பை ரத்து செய்து, அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

 


 

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், சகுந்தலாவுக்கு ஜாமீன் அளித்து, அவர் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி மதுரை உயர்நீதிமன்றம் சகுந்தலாவுக்கு ஆயுள்தண்டனை விதித்தது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது அவர் சார்பில் வக்கீல் தாமஸ் பிராங்க்ளின் சீசர் ஆஜராகி, சகுந்தலா தனது ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததற்கான ஆதாரம் இல்லை. சாட்சிகளின் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.  இறந்த குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இந்த வழக்கில் இருந்து முற்றிலும் வித்தியாசமான தகவலை அளிக்கிறது. அதாவது, கிணற்றில் கிடந்த குழந்தையின் குடலிலோ, நுரையீரலிலோ தண்ணீர் இல்லை. கண்மூடிய நிலையில் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தை இறந்தபின் தான் கிணற்றில் வீசப்பட்டுள்ளது. சகுந்தலா பெற்றோர் வீட்டுக்கு செல்லும்போது குழந்தையை அழைத்து செல்லாமல் தனியாகத்தான் சென்றுள்ளார். எனவே சகுந்தலா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் மீதான தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வாதாடினார்.



விசாரணையின் முடிவில், சகுந்தலா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கும் விஷயத்தில் சின்ன சின்ன சம்பவங்கள் கூட சரியாக விசாரிக்கப்படவில்லை என்பது தெரிகிறது. சாட்சிகள் கூறிய தகவல்கள் அடிப்படையில் மனுதாரருக்கான தண்டனையை கீழ்கோர்ட்டு அளித்துள்ளது. எனவே சகுந்தலாவுக்கு அளித்த ஆயுள்தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவரிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு இருந்தால், திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம் செய்யாத குற்றத்துக்காக 11 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வந்த அந்த பெண் தற்போது இந்த வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.