தேனி மாவட்டத்தில் உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜல்சக்தி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தேனி மாவட்டத்துக்கு வருகை தந்தார். போடியில் உள்ள ஏலக்காய் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அங்கு தொழிலாளர்கள் ஏலக்காய்களை தரம் பிரித்து ஏற்றுமதிக்கு தயார் படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற அங்கு மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு, தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜல்சக்தி துறையின் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பில் கூறியபோது, மத்திய அரசு 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக நடப்பாண்டில் ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உணவு உற்பத்தியில் நம் நாடு அடுத்த ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்று விளங்கும். பிற நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நம் நாடு வேளாண்மையில் முன்னேற்றம் அடையும். மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்யவே மத்திய அமைச்சர்கள் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாநில அரசு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் மத்திய அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களுக்கும் சாமானிய மக்களுக்கு எளிதில் கிடைக்கும்” எனப் பேசினார்.
பின்பு தேனியில் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். முல்லைப்பெரியாறு அணைக்கு நான் செல்ல நினைத்தேன்.
தற்போது செல்ல முடியவில்லை. அடுத்த முறை வரும் போது செல்வேன். தமிழக-கேரள மாநிலம் இடையே இந்த அணை பிரச்சினை உள்ளது. அதை சரி செய்ய முயற்சிப்பேன். நாம் செய்யும் வேலை எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அனைத்து கிராமங்களுக்கும் சாலை அமைத்தார். தற்போது பிரதமர் மோடி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுத்து வருகிறார்” என்றார்.