திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 33). இவர் வேடசந்தூரில் உள்ள இரும்பு கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அவருடைய மனைவி விஜயசாந்தி (30). இவர்கள் 2 பேரும், காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு பிரதாப் (6) என்ற மகனும், தியா 3 வயது மகளும் உள்ளனர். நேற்று முன் தினம் முன்தினம் இரவு நவீன்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் நவீன்குமார் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.




இந்த சூழலில் நேற்று காலை கோடாங்கிபட்டி குளத்துக்கரையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் நவீன்குமார் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலிசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.


மேலும் நவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விசாரணை செய்தபோது நவீன்குமாரின் மனைவி விஜயசாந்தியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணையை செய்தனர். மேலும் விஜயசாந்தி யார், யாரிடம் பேசியிருக்கிறார் என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர். அதில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி பழனிச்சாமி என்ற சிவா (31) என்பவருடன் விஜயசாந்தி அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது.



போலீசார் செய்த விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் நவீன்குமாரை, சிவா கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. கொலை செய்துவிட்டு ஒட்டன்சத்திரத்தில் தலைமறைவாகி இருந்த சிவாவை போலீசார் கைது செய்தனர். கொலை செய்ய உடந்தையாக இருந்த விஜயசாந்தியும் கைது செய்யப்பட்டார். கைதான விஜயசாந்தி போலீசாரிடம் கூறியபோது, நான் திருமணத்துக்கு முன்பு வேடசந்தூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்தேன். அப்போது நவீன்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டோம்.


எனக்கும், என்னுடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு எனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் 2 பேரும் பிரிந்து இருந்தோம். இதனால் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண 'குறி' கேட்கலாம் என்று நினைத்தேன். இதற்காக பழனிச்சாமி என்ற சிவாவிடம் 'குறி' கேட்க சென்றேன். ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த அவர், குறி சொல்வதற்காக வேடசந்தூர் அருகே உள்ள சேணன்கோட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அவரிடம் குறி கேட்க சென்றபோது எனக்கும், சிவாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தி கள்ளக்காதலானது.





இதற்கிடையே என்னுடைய கணவரை அழைத்து வந்தால் குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று சிவா கூறினார். மேலும் என்னுடைய கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு சிவா பேசினார். அதன்பிறகு நானும், என்னுடைய கணவரும் சேணன்கோட்டைக்கு சென்று சிவாவிடம் குறி கேட்டோம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, நானும் என்னுடைய கணவரும் சேர்ந்து வாழ்ந்தோம். இருப்பினும் எனக்கும், சிவாவுக்கும் இடையேயான கள்ளக்காதல் தொடர்ந்தது.


நாங்கள் 2 பேரும் அடிக்கடி சந்தித்து வந்தோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்னுடைய வீட்டுக்கு சிவா வந்தார். எங்களுக்கு இடையேயான கள்ளக்காதல் விவகாரம் என்னுடைய கணவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் என்னை கண்டித்தார். இது, எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் எனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதுகுறித்து சிவாவிடம் தெரிவித்தேன். கணவரை கொலை செய்தால் தான், நாம் சந்தோசமாக வாழமுடியும் என்றேன். அதற்கு சிவாவும் சம்மதம் தெரிவித்தார்.


அதன்படி சம்பவத்தன்று மாலை சிவா, தனது  இரண்டு சக்கர வாகனத்தில் எங்கள் வீட்டுக்கு வந்தார். என்னுடைய கணவரிடம் மதுபானம் குடிக்கலாம் வா என்று அழைத்து சென்றார். எனது கணவரும், அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அதன்பிறகு கோடாங்கிபட்டி குளக்கரைக்கு சென்று 2 பேரும் சேர்ந்து மதுபானம் குடித்தனர். என்னுடைய கணவருக்கு போதை அதிகமானதும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆட்டை அறுப்பதை போல எனது கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அவர் கொலை செய்யப்பட்ட தகவலை, செல்போன் மூலம் எனக்கு தகவல் தெரிவித்து விட்டு சிவா தலைமறைவாகி விட்டார். நானும் எதுவும் தெரியாததை போல வீட்டில் இருந்து விட்டேன்.


இதற்கிடையே குளத்துக்கரையில் என்னுடைய கணவர் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்றேன். என் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக என்னுடைய கணவர் உடலை பார்த்து கதறி அழுதேன். இருப்பினும் என்மீது போலீசார் சந்தேகமடைந்து விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு விஜயசாந்தி வாக்குமூலம் கூறியுள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவி தீர்த்து கட்டிய பயங்கர சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.