சிவகங்கை மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கடந்த 11-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி வருகை தந்த போது அவரோடு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஸ்வரன் பயணம் செய்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை வீடியோ எடுத்து பேஸ்புக் லைவ் செய்த ராஜேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து அ.தி.மு.கவினர் தாக்கினர். இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில் விமான நிலைய சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பு மீதும் மதுரை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.




எடப்பாடி பழனிசாமி, அவரின் பாதுகாவலர் கிருஷ்ணன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகன் மற்றும் அடையாளம் தெரியாத அதிமுக நபர் ஒருவர் ஆகிய 6 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் தி.மு.க., அரசை கண்டித்து கடந்த 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், புறநகர், மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் 2000க்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் கலந்து கொண்டு காவல்துறையை கண்டித்தும், தி.மு.க., அரசை கண்டித்தும் கருப்பு சட்டை அணிந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



 


இந்நிலையில் காவல்துறை அனுமதி இன்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக  அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மற்றும் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் 2500 பேர் மீது சுப்ரமணியபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.