தேனி பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரை மேற்கொண்டார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளரை ஆதரித்து தங்களது பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் நாராயணசாமி ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேனி பங்களா மேடு பகுதியில் மேடைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


அப்போது அவர் பேசியது,  ”இந்த பிரச்சார கூட்டத்தினால் தேனி நகரமே குழுங்குகிறது. இங்கு போட்டியிடும் வேட்பாளர் நாராயணசாமி மிகவும் எளிமையானவர். மக்களோடு மக்களாக இருப்பவர் தான் நம் வேட்பாளர். திமுக வேட்பாளர் எந்த கட்சியில் இருந்து வந்தவர். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.




இங்கு போட்டியிட்டு போனவர். இப்போது ஏன் வந்துள்ளார். டிடிவி 14 ஆண்டு காலம் எங்கு போனார் என்று தெரியவில்லை. பதவிக்காக இப்ப வந்துள்ளார். நான் கிளைச் செயலாளராக இருந்து வந்தவன். 50 ஆண்டு காலம் கட்சியில் உழைத்து வந்துள்ளேன். வேறு கட்சியில் சாதாரண தொண்டர் வேட்பாளராக முடியுமா. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மட்டுமே தொண்டர்கள் தலைவராக முடியும். மேலும் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்துவதற்கு  ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். தற்போது 152 அடியாக உயர்த்துவதற்கு திமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை”.




மேலும் டிடிவி தினகரன் பிஜேபியை எவ்வாறு விமர்சித்தார் என்று பிஜேபி நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி என டிடிவி தினகரன் பேசும் பழைய வீடியோவை வாக்காளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ”14 ஆண்டுகள் மக்களை பார்க்காத (டிடிவி) எப்படி ஓட்டுபோட முடியும். அவரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் அதிமுக கொண்டுவரப்பட்ட சுமார் 2000 அம்மா கிளினிக் தந்தது அதிமுக அரசு. ஆனால் அதையும் மூடியது திமுக அரசு. அதற்கு எச்சரிக்கையாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்யவேண்டும். விண்ணை முட்டும் அளவுக்கு இன்றைய தினம் விலைவாசி உயர்ந்துள்ளது. இன்றைக்கு கூட மதுரையில் மார்க்கெட் சென்ற போது அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர் 40 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. 




மீண்டும் அதிமுக அரசு அமைந்ததும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்தது ஸ்டாலின் அரசின் சாதனை. நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வெற்றி பெற்றவர் ஸ்டாலின். ஆடு மாடு கோழி வளர்ப்பு எல்லாம் விவசாய உப தொழில்கள். அதையெல்லாம் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கியதை நிறுத்தியவர் ஸ்டாலின்.  விவசாயிகளை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும். ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வராக இருக்கிறார். எள்ளு எது? கொள்ளு எது? எனத் தெரியாத முதல்வர். அவரிடம் பத்து வகை தானியங்களைக் காட்டி ஒவ்வொன்றும் என்ன தானியங்கள் என்று கேட்டுப் பாருங்கள் தெரியாது. விவசாயத்தை பற்றி தெரியாததால் தான் அதையெல்லாம் நிறுத்தி உள்ளார். மத்தியில் இருக்கும் 38 எம்.பி.க்கள் தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தனர். ஆனால் அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர்.‌ உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார். அதிமுக மீது தொடர்ந்து பொய்யான கருத்துக்களை கூறி வருகிறார். அதை அதிமுக கட்சி முறியடிக்கும்.




எதிர்கட்சியாக இருந்த போது கோ பேக் மோடி என கருப்புக்கொடி காட்டிய திமுக தற்போது ஆளும் கட்சியானதும் வெல்கம் மோடி என கூறுகின்றனர்.  மக்களுக்கு எதிராக எந்தவித திட்டங்களையும் அதிமுக எதிர்க்கும். அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. எனக்கு பின்னால் சாதாரண தொண்டர் தான் தலைமைக்கு வருவார். திமுகவை போல வாரிசு அரசியல் நடத்துவது இல்லை அதிமுக.  ‌தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின், தனது அரசின் சாதனைகளை கூற முடியவில்லை. அதனால் அதிமுக மற்றும் தன்னை பற்றி தான் குறை கூறி வருகிறார்.‌ அதிமுக கட்சியை அபகரித்து விடலாம் என்று சிலர் நினைத்த போது அதை முறியடித்து மீட்டெடுத்துள்ளோம். என பிரச்சார மேடையில் வேட்பாளரை ஆதரித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி வரும் தேர்தலில் ஒற்றை விரால் மத்தியில் உள்ள மோடி அரசுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டு தனது பிரச்சார பரப்பரை முடித்து சென்றார்.